சேஷு மரணம்..கஷ்டப்பட்டாலும்.. உதவி செய்வதை விடல.. அமுதவாணன் உருக்கம்!
சென்னை: விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சேஷு. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் அவர் காலமானார். அவருக்கு வயது 60. தான் கஷ்டப்பட்ட போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் அவரின் குணம் குறித்து அமுதவாணன் உருக்கமாக பேசி உள்ளார்.
நகைச்சுவை நடிகரான சேஷு, துள்ளுவதே இளமை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சந்தானம் நடித்த A1 திரைப்படத்தில் இடம்பெறும் 'அச்சச்சோ அவரா, ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சே' வசனத்தை பேசி சேஷு பிரபலமானார். அந்த படத்தைத் தொடர்ந்து, சந்தானம் நடித்த பாரீஸ் ஜெயராஜ், குலுகுலு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் சேஷு: சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குபட்டி ராமசாமி படத்தில் சேஷு நடித்த கதாபாத்திரம் அதிகம் அளவில் பேசப்பட்டது. கடந்த 15ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேஷு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவர் செய்த உதவி: இந்நிலையில்,சேஷுவிற்கு உதவி கேட்டு அமுதவாணன் பேசிய வீடியோ ஒன்று தற்போது டிரெண்டாகி உள்ளது. அதில். நகைச்சுவை நடிகர் சேஷு நிறைய நல்லது செய்து இருக்கிறார். பல பேருக்கு உதவி செய்து இருக்கிறார். பல குழந்தைகளை படிக்க வைத்து இருக்கிறார். அவரே கஷ்டமான சூழ்நிலையில் தான் இருந்தாரு, அப்படி இருந்தாலும். மற்றவர்களிடம் வாங்கியாவது, இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு அவர் உதவி செய்து விடுவார். பல ஏழை எளிய பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறார்.
இதை நாங்களே பார்த்து இருக்கிறோம். அப்படிப்பட்ட நல்லவர் இன்று உடல் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் இருக்கிறார். அவர் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள் என்று அமுதவாணன் உருக்கமுடன் பேசி இருந்தார். பலர் அவருக்காக உருகி வேண்டிக் கொண்ட போது இன்று மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளார்.


Click it and Unblock the Notifications