அஜித்தின் மாற்றத்துக்கு காரணம் இவர்தான்; ஆசைக்கு அஜித் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. நடிகர் ஓபன் டாக்
சென்னை: அஜித்தின் மாற்றத்திற்கான காரணத்தையும், ஆசை படத்துக்கு அஜித் பெற்ற சம்பளம் குறித்தும் மாரிமுத்து பேசியிருக்கிறார்.
அமராவதி படம் மூலம் அறிமுகமான அஜித்குமார் ஆரம்பகாலத்தில் சினிமாவில் பல போராட்டங்களை சந்தித்தவர். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாததன் காரணமாக தோல்விகளையும் சந்தித்து வந்தவர் அஜித்குமார். ஆனால் இப்போது கோலிவுட்டின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

அஜித்தின் ஆரம்பகாலம்
அஜித் அறிமுகமான அமராவதி திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி போகவில்லை. இருப்பினும் மனம் தளரவிடாத அஜித்குமார் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் அஜித்துக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கவில்லை. இதனால் சினிமாவிலிருந்து அஜித் விரைவில் காணாமல் போய்விடுவார் என பலர் அப்போது ஆரூடம் கூறினர்.

ஆசை நாயகன் அஜித்குமார்
ஒரு பெரும் வெற்றிக்காக காத்திருந்த அஜித்குமாருக்கு வசந்த் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்துக்கு ஆசை என்று பெயரிடப்பட்டது. அந்தப் படத்தில் அஜித்துடன் சுவலட்சுமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தனக்கு ஒரு வெற்றி வேண்டும் என்று காத்திருந்த அஜித்துக்கு ஆசை படம் மெகா ஹிட்டானது. படம் 285 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதனால் சினிமாவில் அவருக்கு மறுவாழ்வு கிடைத்தது. மேலும் அவருக்கு ஆசை நாயகன் என்ற பட்டமும் கிடைத்தது.

தொடர் காதல் படங்கள்
ஆசை வெற்றியை அடுத்து அவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்கள் காதல் ஜானரிலேயே அமைந்தன. அந்தப் படங்களும் வரிசையாக ஹிட்டாக சினிமாவில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார் அஜித். இப்படிப்பட்ட சமயத்தில் வாலி படத்தில் நடித்தார். வாலி படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முதல் படமாகும். கதாநாயகன், வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் அஜித். வாலி படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. அதனையடுத்து காதல் ஜானரிலிருந்து வேறு ஜானர்கள் மீதும் அஜித் தனது கவனத்தை திருப்பினார்.

ஆசைக்கு அஜித் பெற்ற சம்பளம்
அதனையடுத்து அவர் பல ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்து தற்போது ஒரு படத்துக்கு 90லிருந்து 100 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் அஜித்திற்கு வாழ்க்கை கொடுத்த ஆசை படத்தில் அவர் பெற்ற சம்பளம் குறித்த தகவல் தற்பொது தெரியவந்திருக்கிறது. அதாவது அந்தப் படத்துக்கு அஜித் 25,000 ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதுவும் முதலில் 15,000 ரூபாய்தான் சம்பளமாக பேசப்பட்டதாம். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து அவருக்கு 25,000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

சம்பளம் பெற்றதும் அஜித் செய்த செலவு
25,000 ரூபாயை அஜித் சம்பளமாக பெற்றாலும் அனைவருக்கும் தாராளமாகவே செலவு செய்வாராம். மேலும் யூனிட்டில் இருக்கும் பலரை அழைத்து சென்று சாப்பாடு, விருந்து என அவர்களுக்கு கொடுத்து மகிழ்வாராம். இதனை ஆசை படத்தில் வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்த மாரிமுத்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அஜித்திடம் இப்போது ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு யார் காரணம்?
மேலும் அந்தப் பேட்டியில் பேசிய மாரிமுத்து, 'அஜித்திடம் இப்போது அந்த குணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை ஷாலினியை அவர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் என்ற அமைப்புக்குள் சென்ற பிறகு தனது செலவு செய்யும் தன்மையை மாற்றியிருக்கலாம். அப்படி இருப்பதுதான் நல்லதும்கூட' என கூறியிருக்கிறார். அதேசமயம், அஜித் இப்போதும் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்துவருகிறார் என பலர் கூறுவது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications