சினிமாவா அய்யோ ஆளை விடுங்க.. தெறித்து ஓடும் உதயநிதி ஸ்டாலின் - காரணம் என்ன?
சென்னை: இனி சினிமா தொடர்பாக தன்னை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அரசியல் சார்ந்த குடும்பத்தில் பிறந்த உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தை தொடங்கி சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அவர் முதலில் தயாரித்த படம் விஜய் நடிப்பில் உருவான குருவி படம் ஆகும். அதன் பிறகு பல படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வந்தார் உதயநிதி.

ஹீரோவாக மாறிய உதயநிதி ஸ்டாலின்
தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஹீரோ ஆசை எட்டிப்பார்த்தது. அதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் உதயநிதி. முதல் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றாலும் அந்த வரவேற்புக்கு முழுக்க முழுக்க சந்தானம்தான் காரணம் என பலர் கூறினர். எனவே ஹீரோவாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்த உதயநிதி
அதற்கு அடுத்ததாக அவர் நடித்த படங்கள் சரியாக போகாத சூழலில் அகமது இயக்கத்தில் மனிதன் படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர், சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே, மிஷ்கின் இயக்கத்தில் சைகோ ஆகிய கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். கடைசியாக அவர் நடித்திருந்த கலகத்தலைவன் படத்திலும் அவரது நடிப்பு சிறப்பாகவே இருந்தது.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்
சூழல் இப்படி இருக்க தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இதனால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ளப்போவதாக அறிவித்த அவர் விக்ரம், பீஸ்ட், துணிவு உள்ளிட்ட பல படங்களை வெளியிட்டார். இதனையடுத்து அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் அறிவித்திருக்கிறார். மேலும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திலிருந்தும் அவர் வெளியேறிவிட்டார். இதற்கிடையே மாரி செல்வராஜின் மாமனிதன் படத்திலும், மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்கள்தான் அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் கடைசி படங்களாகும்.

கண்ணை நம்பாதே குறித்து உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் கண்ணை நம்பாதே படமானது வரும் 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அருள்நிதி நடித்து மாறன் இயக்கிய இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை பார்த்துவிட்டு அவருக்கு ஃபோன் செய்து படம் நல்லா இருக்கு என்றேன். பாண்டிராஜ் இயக்கிய வம்சம் எனக்கு வந்த கதை. அதில் ரொம்ப மெனெக்கெட வேண்டும் என இயக்குநர் சொன்னதால் அதற்கு அருள்நிதி சரியாக இருபார் என நான் அவரை அனுப்பி வைத்தேன். இப்போது அருள்நிதி மாறனை என்னிடம் அனுப்பி கதை கேட்க சொன்னார்.

க்ரைம் கதை டூ காதல் கதை
மாறன் முதலில் என்னிடம் சொன்னது காதல் கதை. ஆனால் எனக்கு க்ரைம் கதையில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. பிறகு அப்படிப்பட்ட கதையை அவர் என்னிடம் சொன்னார். அதுதான் கண்ணை நம்பாதே. இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில்தான் நடந்திருக்கிறது. இயக்குநர் மாறன் கடினமாக உழைத்திருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவால் தாமதமானது. முதல் ஷெட்யூல் முடிந்ததும் எம்.பி தேர்தல் பரப்புரை, அடுத்து இளைஞரனி செயலாளர், அடுத்து எம்.எல்.ஏ, இப்போது அமைச்சராகவே ஆகிவிட்டேன்.

சினிமா குறித்து என்னை தொடர்புகொள்ளாதீர்கள்
நான் ஒரே பாடலில் வளர்ந்துவிட்டேன் என நினைத்துக்கொள்வார்கள். ஆனால் நான் நான்கரை வருடங்கள் உழைத்துதான் அமைச்சராக ஆனேன்.ரெட் ஜெயன்ட்டில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதை பார்த்துக்கொள்வது அர்ஜுன் துரையும், செண்பகமூர்த்தியும்தான். இனி சினிமா தொடர்பாக யாருமே என்னை தொடர்புகொள்ள வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











