vijay - திமுக - காங் கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்.. நடிகர் விஜய் வசந்த்தின் ஆசை
சென்னை: Vijay (விஜய்) நடிகர் விஜய் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என நடிகரும், எம்.பியுமான விஜய் வசந்த் தெரிவித்திருக்கிறார்.
234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று மாணவ, மாணவிகளை விஜய் சமீபத்தில் சந்தித்தார். அவர்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகையையும் சான்றிதழையும் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார். அவரது இந்த செயல்பாடு பலரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது. அதெசமயம் இது அப்பட்டமான அரசியல் லாபம் என்ற விமர்சனத்தையும் அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

விஜய் பேச்சு: விழாவில் பேசிய விஜய், "தேர்வில் வெற்றி பெறாதவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்கு தைரியத்தை கொடுங்கள். குணத்தை இழந்தால் அனைத்தையுமே இழந்த மாதிரி. இதற்கு பிறகு நீங்கள் வெவ்வேறு ஊர்களுக்கு, பள்ளிகளுக்கு செல்லலாம். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் சூழல் உருவாகலாம். அப்போது ஒரு சுதந்திரம் கிடைக்கும். அந்த சுதந்திரத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தலைவர்களை படியுங்கள்: உங்களால் முடியாது என்று பலர் சொல்வார்கள். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்குள் ஒருவனோ, ஒருத்தியோ இருப்பார். அதை கேளுங்கள். பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். பணம் வாங்காமல் வாக்கு அளிக்க வேண்டும்" என பல விஷயங்களை பேசினார். குறிப்பாக தனது பேச்சை ஆரம்பிக்கும்போது அசுரன் படத்தில் வரும் காடு இருந்தா புடுங்கிக்குடுவானுங்க, நிலம் இருந்தா பறிசிக்குடுவானுங்க ஆனா படிப்ப நமட்டேர்ந்து எடுக்க முடியாது" என வசனத்தை பேசினார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது.
விவாதம்: விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் களத்திலும் எதிரொலித்தது. சீமான் உள்ளிட்டோர் அவரது பேச்சுக்கு ஆதரவை கொடுத்தாலும் நடிகன் என்பதால் மட்டுமே நாடு ஆள தகுதி வந்துவிட்டதாக நினைக்கக்கூடாது என கூறியிருந்தார். அதேபோல் வாக்குக்கு பணம் குறித்து விஜய் பேசியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய் பேசியதில் எந்த ஒரு தவறும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
விஜய் வசந்த்: இந்நிலையில் நடிகரும், எம்.பியுமான விஜய் வசந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு புதிதல்ல. அதுபோல பல தலைவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து சாதித்திருக்கிறார்கள். விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து காலம் பதில் சொல்லும். இப்போதுதான் தன்னுடைய அரசியல் வருகை குறித்து நடிகர் விஜய் வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். போகப் போக பார்க்கலாம்" என்றார்.
லியோ: விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. லியோ படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் அவர் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











