இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை: பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான விஜய்ஆண்டனி பல பல படங்களில் கதாநாயகனாகவும் , இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த விஜய் ஆண்டனி, பல நலத்திட்டங்களுக்கு உதவி செய்தார்.
தூக்கில் தொங்கியநிலையில்: இந்நிலையில், விஜய்ஆண்டனியின் மகள் மீரா என்கிற லாரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த இவர், நேற்று இரவு தனது அறையில் வழக்கம் போல் உறங்கச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணி அளவில் அவரது தந்தை விஜய் ஆண்டனி மகளின் அறைக்கு வந்த போது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உறுதிப்படுத்திய மருத்துவர்கள்: அதன் பின் வீட்டு பணியாளர்களின் உதவியுடன் அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லாராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வீட்டிலேயே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தத்தில்: முதற்கட்ட விசாரணையில் மீரா சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதற்காக அவர் கடந்த சில நாட்களாக மருந்து எடுத்துக்கெண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும், தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாததால், போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவுன்சிலிங் தேவை: இதுபோன்ற தற்கொலை எண்ணம் தோன்றும் போது, முடிந்தவரை தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். யாரிடத்திலாவது மனம் விட்டு பேசிவிட வேண்டும். இல்லை என்றால் இதற்காகவே இருக்கும் தொண்டுநிறுவனங்களுக்கு சென்று கவுன்சிலிங் எடுத்துக்கொள்வது நல்லது.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











