திடீர் மாரடைப்பு.. 23 நாட்களாக உயிருக்கு போராடிய தெலுங்கு நடிகர் தாரக ரத்னா உயிரிழந்தார்!
ஆந்திரா: தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான நந்தமுரி தாரக ரத்னா பெங்களூருவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.
கடந்த 23 நாட்களாக உயிருக்கு போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நந்தமுரி தாரக ரத்னா 1983ம் ஆண்டு பிப்ரவரி 22 பிறந்தார். என்.டி. ராமராவின் பேரனான இவர், பிரபல நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் கல்யாண் ராம் ஆகியோரின் உறவினர் ஆவார்.

நடிகர் தாரக ரத்னா
2002ம் ஆண்டு கோதண்டராமி ரெட்டியின் இயக்கத்தில், 'ஒகடோ நம்பர் குராடு' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் தாரக ரத்னா. அதன்பிறகு, அவர் பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு "9 ஹவர்ஸ்" என்ற வலைத் தொடரில் நடித்திருந்தார். இத்தொடர் ஓடிடியில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

மயங்கி விழுந்தார்
ஆந்திர மாநிலம் சித்தூரில் கடந்த ஜனவரி 27ம் தேதி நடந்த அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து,அருகில் இருந்த குப்பம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி அளித்த பின், பெங்களூருவில் உள்ள நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்
அங்கு அவருக்கு கடந்த 23 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாரக ரத்னாவின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என பல அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் இரங்கல்
தாரக ரத்னாவின் மறைவுக்கு அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில், தாரக ரத்னா காருவின் மறைவு அறிந்து மனம் உடைந்துவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என பகிர்ந்துள்ளார். அதேபோல, மகேஷ் பாபு தாரக ரத்னாவின் அகால மறைவு அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அளிக்கிறது. விரைவில் நம்மைவிட்டு போய்விட்டார், அவரது ஆன்மா சாத்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











