சுடுகாட்டில் எதிர்நீச்சல் மாரிமுத்து கடைசியாக சொன்னது இதுதான்..நடிகர் விக்னேஷ் ஓபன் டாக்
சென்னை: Ethirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) மாரிமுத்து குறித்து நடிகரும், ஆர்ஜேவுமான விக்னேஷ் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
மாரிமுத்து கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் வணிக ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதனையடுத்து புலிவால் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் தோல்வியையே சந்தித்தது. சூழல் இப்படி இருக்க மிஷ்கினின் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

எதார்த்தமான நடிப்பு: அறிமுகமான முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார். அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. கேரக்டர் ரோல், வில்லன் ரோல், ஹீரோவுக்கு அப்பா ரோல் என பல கதாபாத்திரங்களை ஏற்றார். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு நியாயத்தையும் சேர்த்தார். கடைசியாக சினிமாவில் அவர் நடித்து ஜெயிலர் படம் வெளியானது. மேலும் இந்தியன் 2 உள்ளிட்ட 15 படங்கள் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.
சின்னத்திரை: பெரிய திரைபோல் சின்னத்திரையிலும் அறிமுகமான அவர் எதிர்நீச்சல் நாடகத்தின் மூலம் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாகியிருக்கிறார். அவர் ஏற்றிருந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்காகவே இளைஞர்களும் எதிர்நீச்சல் சீரியலை பார்க்க ஆரம்பித்தனர். துரதிர்ஷ்டவசமாக அவர் கடந்த மாதம் உயிரிழந்தார். சீரியலுக்கு டப்பிங் கொடுத்தபோதே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
முற்போக்கு: மாரிமுத்து தனது மனதில் பட்டதை பட்டென சொல்லிவிடுவார். ட்விட்டரில் ஒரு பெண்ணுக்கு அவர் நம்பர் கொடுத்துவிட்டார் என்று சிலர் அந்த விஷயத்தை சர்ச்சையாக்கினர். ஆனால் எதற்கும் பயப்படாத அவர் ஆம் நான் நம்பர் கொடுத்தேன் என்று தைரியமாக கூறினார். அதேபோல் விவாத நிகழ்ச்சியிலும் ஜோதிடத்திற்கு எதிராக பேசி தான் ஒரு பக்கா முற்போக்குவாதி என்பதை அனைவருக்குமே உணர்த்தினார்.
இறுதி அஞ்சலி போஸ்டர்: மாரிமுத்து இறப்பதற்கு சில நாட்கள் முன்பு ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவர் இறப்பது போன்று காட்சி எடுக்கப்பட்டு அதற்காக இறுதி அஞ்சலி போஸ்டரும் ஒட்டப்பட்டது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் அந்தக் காட்சி குறித்தும் மாரிமுத்து குறித்து நடிகரும், ஆர்.ஜேவுமான விக்னேஷ் பேசியிருக்கிறார்.
விக்னேஷ் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "அந்த இறுதி அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட படத்தில் அவருடன் நானும் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது பாடையில் படுப்பதாகட்டும், இறந்தவர்களுக்கு செய்யும் சடங்காகட்டும் அனைத்துக்கும் இவர் போய் போய் படுத்து எழுந்து வந்தார். நான் ஒருமுறை அண்ணே என்ன எல்லாத்துக்கும் போறீங்க. உண்மையான சுடுகாடு வேற இது. ஏன் அண்ணே இப்டி பண்றீங்க என்று கேட்டேன்.
அதற்கு அவரோ, அட தம்பி இப்படி எல்லாம் பண்ணா நான் என்ன உண்மையாவே செத்தா போகப்போறேன். அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி கூறினார். மேலும் என்னிடம் அவர், தம்பி இப்போதான் வாழ்க்கையே நல்லா இருக்கும். எல்லா நாளும் பிஸியா இருக்கேன். நைட் 9 மணி ஆனா போதும் மழை சாரல் மாதிரி சன் டிவி என்னை எல்லா வீட்டுக்குள்ளையும் தூறல் மாதிரி விழ செய்யுது. இப்போ எல்லா வீட்டுக்குள் நான் போயிட்டேன்ல. கொடுக்கமாட்டாங்க என நினைத்து ஒரு தொகையை சம்பளமாக கேட்டால் அதையும் தராங்க ப்பா என்று சிரித்தபடியே சொன்னார். அவர் கதை சொன்னால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











