அணையில் மூழ்கி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட பிரபல நடிகரின் கடைசி போட்டோஸ்.. இணையத்தில் வைரல்!
கொச்சி: அணையில் மூழ்கி பிரபல நடிகர் உயிரிழக்கும் முன் எடுக்கப்பட்ட கடைசிப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிரபல மலையாள நடிகரான அனில் நெடுமங்காடு ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தில் சதீஷ்குமார் என்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார்.

பாபம் செய்யாதவர்
கம்மாட்டிபாடம், பாவாட உட்பட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனில் நெடுமங்காடு. கடைசியாக, பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே என்ற படத்தில் நடித்திருந்தார். இவர், இப்போது பீஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். இதில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடிக்கிறார்.

மலங்காரா அணை
இதன் ஷூட்டிங் தொடுபுழாவில் நடந்து வருகிறது. இதற்காக அங்கு சென்ற அனில், படப்பிடிப்பு முடிந்த பின், அங்குள்ள மலங்காரா அணையில் நண்பர்களுடன் நேற்று மாலை குளிக்கச் சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது, திடீரென நீரில் மூழ்கினார். அவரை சிறிது நேரம் காணாததால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், தேடினர்.

அணையில் மூழ்கி
சிறிது நேரத்தில் அவர் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மறைந்த அனில் நெடுமங்காடுக்கு வயது 48. படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ஒருவர், அணையில் மூழ்கி உயிரிழந்தது மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் ஷாநவாஸ்
இதையடுத்து மலையாள திரைத்துறையினர், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமா துறையில் இந்த வருடம் பல திறமையானவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் பிரபல மலையாள இயக்குனர் சச்சி மரணமடைந்தார். சில நாட்களுக்கு முன் சூஃபியும் சுஜாதாயும் இயக்குனர் ஷாநவாஸ் உயிரிழந்தார். இப்போது, அனில் நெடுமங்காடும் உயிரிழந்துள்ளார்.

கடைசிப் புகைப்படங்கள்
இந்நிலையில், அனில் நெடுமங்காடு இறப்பதற்கு முன் அணையின் ஓரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பாளரும் தயாரிப்பு நிர்வாகியுமான பாதுஷா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் நண்பர்களில் ஒருவர் எடுத்துள்ளார். இந்த போட்டோஸ், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











