இளையராஜாவுக்கு நிறைய பேரால் தொந்தரவு.. அதனால் வந்த வினை.. அனுமோகன் ஓபன் டாக்
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவரால்தான் தமிழ் திரையிசையின் அடையாளம் மாறியது. இதன் காரணமாகவே அவர் இன்றளவும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையும் திரைப்படமாகவிருக்கிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து அனுமோகன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அன்னக்கிளி படத்தின் மூலம் 1975ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கினார். முக்கியமாக அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வரப்பில் இருந்தவரும் இசைக்காக வாயை திறந்தார். அந்த அளவுக்கு இளையராஜாவின் பாடல்கள் முதல் படத்திலேயே சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் கிராமத்து வாசனை அடிக்கக்கூடிய இசையை எந்த சமரசமுமின்றி மக்களுக்கு கொடுத்தார் இளையராஜா.

இசைஞானி: அன்னக்கிளி படத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க பாரதிராஜாவும் சினிமாவுக்குள் வந்து அவர் புதிய பாய்ச்சலை செலுத்த எவர்க்ரீன் கூட்டணியான பாரதிராஜா - இளையராஜா கூட்டணி உருவானது. அவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவையும், இசையையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றனர். பாரதிராஜா மட்டுமின்றி மகேந்திரன், பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என அப்போதைய பீக் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு கலைஞர் கருணாநிதி இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார்.
மோதல்: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு இயக்குநர்களுடன் நெருக்கமாக இருந்தாரோ அதே அளவு மோதலையும் சந்தித்தவர். பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடனும் ஒருகட்டத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டார். பிறகு பாரதிராஜாவுடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்தாலும் பாலசந்தருடன் இருந்த கருத்து வேறுபாடு கடைசிவரை தீரவே இல்லை என்று கூறப்படுகிறது. இளையராஜா கடைசிவரை பிரியாமல் பணியாற்றிய இயக்குநர்களில் ஒருவர்தான் பாலுமகேந்திரா. மேலும் இளையராஜாவுக்கு ரொம்பவே தலைக்கனம் அதிகம் என்ற ஒரு விமர்சனமும் உண்டு.
அனுமோகன் பேட்டி: இந்நிலையில் படையப்பா, பாட்டாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்த அனுமோகன் இளையராஜா குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இளையராஜா வேலையில் இருக்கும்போது தொந்தரவு செய்தால் அவர் கோபப்படுவார். யாராவது சும்மா போகிறவர்கள் மீதா கோபப்படுவார்கள். இன்றைக்கு மட்டும் அவர் இப்படி இல்லை. முதன்முறையாக கம்போசிங் தியேட்டருக்குள் சென்று முதல் பாடலுக்கு இசையமைத்தபோதே அவர் அப்படித்தான் இருந்தார்.
எங்களுக்கு தெரியும்: அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர் ரெக்கார்டிங் தியேட்டரில் இருக்கும்போது நாங்கள் அவரை தொந்தரவு செய்யவே மாட்டோம். எங்களைப் பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும். எங்களுக்குள் புரிதல் இருப்பதால் சர்ச்சை உருவாகாது. இளையராஜாவுக்கு நிறைய பேர் தொந்தரவு கொடுத்ததால் வந்த வினை. எதிர்பார்த்து சென்ற ஒன்று கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றம் வரும். எதிர்ப்பார்த்ததைவிட பெரியதாக கிடைத்தால் ஏமாற்றம் வராது.
இளையராஜா இளையராஜாதான்: இளையராஜா போன்று மிகவும் டெடிகேஷனாக வேலை செய்யும் கலைஞரை நான் பார்த்ததே இல்லை. அவருடைய டெடிகேஷன் லெவல் அப்படி இருக்கும். தங்களை யாராவது பார்க்க வந்திருந்தால் வேறு இசையமைப்பாளர்கள் இரண்டு நிமிடங்களாவது பார்த்து பேசிவிட்டு செல்வார்கள். ஆனால் ராஜா அப்படி இல்லை. அவர் சும்மா இருக்கும் நேரத்தில் மட்டும்தான் அவரை சென்று பார்க்க முடியும்" என்றார்.


Click it and Unblock the Notifications











