தவறை கண்டும் காணாமல் இருப்பது கோழைத்தனம்.. சுஷாந்த் மரணம் தொடர்பாக பிரபல நடிகர் விளாசல்!
மும்பை: சுஷாந்த் மரணத்திற்கு பின்னணியில் உள்ள உண்மையை தெரிந்து கொள்ள அவரது குடும்பத்தினர் தகுதியானவர்கள் என பிரபல பாலிவுட் நடிகரான அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது. சுஷாந்த் வழக்கில் மும்பை போலீசார் அலட்சியம் காட்டுவதாக சுஷாந்த் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வழக்கு விசாரணைக்காக சென்ற பீகார் ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி 15 நாட்கள் கட்டாயமாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இந்த கேப், ஆதாரங்கள் அழிக்கப்படுவதை உறுதி செய்வதற்கே என சாடினார் சுஷாந்த் குடும்ப வக்கீலான விகாஸ் சிங்.

சிபிஐயிடம் ஒப்படைப்பு
பீகார் டிஜிபியும் ஐபிஎஸ் அதிகாரி தனிமைப் படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க நேற்று பீகார் மாநில அரசு பரிந்துரைத்த நிலையில் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு இன்று சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏற்ற தாழ்வுகள் உள்ளன
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான அனுபம் கெர் சுஷாந்த் சிங்கின் குடும்பத்திற்குகு ஆதரவாக பேசியுள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார் அனுபம் கெர். அதில் அவர் பேசியிருப்பதாவது, சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.

கண்களை மூடுவது போன்றது
இந்த வழக்கில் கருத்து தெரிவிக்காதது கண்களை மூடிக்கொண்டு இருப்பது போன்றது. நான் பல நாட்களாக இதைப் பற்றி எதுவும் பேசவில்லை, பலர் அதைப் பற்றி கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கிறார்கள், ஏனென்றால் என்ன சொல்வது என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.

அமைதியாக இருப்பது உதவாது
ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து, ஒரு சக நடிகராகவும், மனிதராகவும் இருப்பதால், அதை ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வது நமது பொறுப்பாகும். ஒருவர் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது யாரையும் விமர்சிக்கவோ கூடாது, ஆனால் அதேநேரம் அமைதியாக இருப்பதும் எந்த உதவியும் செய்யாது.

கோழைத்தனம்
யார் சரி யார் தவறு என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அவரது உறவினர்கள், அவரது ரசிகர்கள் மற்றும் நீதிக்காக போராடும் அவரது நலம் விரும்பிகள், நாம் அவர்களுடன் இருக்கிறோம்னு உணர வேண்டும். ஒரு தவறைக் கண்டும் காணாமல் இருப்பது கோழைத்தனத்தின் அறிகுறியாகும், கோழையாக இருப்பது ஒரு நல்ல விஷயம் அல்ல. இவ்வாறு அந்த வீடியோவில் அனுபம் கெர் பேசியுள்ளார்.

தகுதியானவர்கள்
மேலும் சுஷாந்தின் குடும்பம் மற்றும் அவருடைய ரசிகர்கள் உண்மையை அறிய தகுதியானவர்கள். இவ்வளவு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. பல சதிக் கோட்பாடுகள் உள்ளன, ஆனால் இனி யார் எந்தப் பக்கத்தில் நிற்கிறார்கள் என்பது பற்றி அல்ல, இந்த வழக்கு ஒரு தர்க்கரீதியான முடிவை எட்டுவதை உறுதி செய்ய வேண்டும்

உண்மை என்ன?
நாம் என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் #JusticeforSushant என்றும் குறிப்பிட்டுள்ளார். அனுபம் கெர் சுஷாந்தின் சோலோ பிளாக்பஸ்டர் படமான தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











