Arjun Daughter Engagement - ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகளுக்கு முடிந்தது நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்துகள்
சென்னை: Arjun Daughter Engagement (அர்ஜுன் மகள் நிச்சயதார்த்தம்) நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும் ஆக்ஷனாலும் பட்டையை கிளப்பியவர். அவரது சண்டைக்காட்சி, உடற்கட்டுக்கென்று இன்றுவரை ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மட்டுமில்லை: அர்ஜுன் நடிகராக மட்டும் திரையுலகில் ஜொலிக்காமல் இயக்குநராகவும் ஜொலித்தவர். சேவகன், பிரதாப், ஜெய்ஹிந்த், சுயம்வரம், வேதம், ஏழுமலை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அதுமட்டுமின்றி கர்ணா, கன்னடத்தில் துட்ட முட்ட ஆகிய படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார். தற்போது லீடிங் ஹீரோவாக இருக்கும் விஷால்கூட அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோவில் அர்ஜுன்: தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் வயதான பிறகு ஹீரோ ரோலுக்கு டாட்டா சொல்லிவிட்டார். இருந்தாலும் இன்னமும் ஹீரோ போன்றே இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் ஹரோல்டு தாஸ் என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். தியேட்டரில் விஜய் எண்ட்ரிக்கு எப்படி அப்ளாஸுகள் எழுந்தனவோ அதேபோல் அர்ஜுனின் எண்ட்ரிக்கும் எழுந்தன.
மகள் ஐஸ்வர்யா: நடிகர் அர்ஜுனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தி பிரேம பரஹா, தமிழில் சொல்லிவிடவா ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
காதல் டூ நிச்சயதார்த்தம்: சூழல் இப்படி இருக்க கோலிவுட்டில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்தார் ஐஸ்வர்யா. இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். அர்ஜுன் மகளும், தம்பி ராமையாவின் மகனும் காதலிக்கும் விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையே தந்தது.
ஏனெனில் இரண்டு பேரும் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இந்நிலையில் இரண்டு பேரின் காதலுக்கும் க்ரீன் சிக்னல் விழுந்ததை அடுத்து நிச்சயதார்த்தம் இன்று நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றனர். தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











