இளையராஜாவை அவன்னு சொல்றீங்க.. அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க.. மிஷ்கினை விளாசிய நடிகர்
சென்னை: இயக்குநர் மிஷ்கின் பாட்டல் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் ஒரு குடிகாரன் என்றும் இளையராஜாதான் பாதி பேரை குடிகாரராக்கினார் என்றும் பேசினார். மேலும் ஆபாசமாகவும் சில வார்த்தைகளை பேசினார் அவர். அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் வலுக்க தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் இன்று 2k லவ் ஸ்டோரி படத்தின் விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ் மிஷ்கினை விளாசியிருக்கிறார்.
சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர் என்று பெயர் எடுத்தவர். அவர் எடுத்த படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக கவனம் ஈர்ப்பவை. அவர் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை பார்த்துவிட்டுத்தான் இயக்குநர் பாலா அழைத்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு பிசாசு படத்தை இயக்கும் வாய்ப்பை மிஷ்கினுக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்: மிஷ்கினின் படங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்படுகிறதோ அதே அளவுக்கு விமர்சனத்தையும் சந்திப்பவை. அதாவது அவர் இயக்கும் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களின் காப்பிதான். படத்தில் வைக்கும் சீன்களும், ஷாட்களும்கூட ஹாலிவுட் படத்தை பார்த்து அப்படியே தனது படத்திலும் வைப்பார் என்று குற்றச்சாட்டும், விமர்சனமும் எழும். இது ஒருபக்கம் இருக்க மிஷ்கினின் பேச்சும் அண்மைக்காலமாக கடுமையான விமர்சனத்தை சந்தித்துவருவதும் கவனிக்கத்தக்கது.
பாட்டல் ராதா: அப்படித்தான் பேரன்பு, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களின் விழாக்களில் அவர் பேசியது சர்ச்சையானது. இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நான் மிகப்பெரிய குடிகாரன். மதுவை ரசித்து, ருசித்து குடிப்பவன். ஆனால் ஒருபோதும் அந்த மது என்னை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது கிடையாது. சினிமாவில் அதிகம் குடித்தவனும், குடிப்பவனும், குடிக்கப்போகிறவனும் நானே. இந்த மேடையில் வெற்றிமாறன், அமீரை தவிர்த்து எல்லோருமே குடிப்பவர்கள்தான்.
மூக்கிலேயே குத்த வேண்டும்: நான் உதவி இயக்குநராக இருந்தபோது குடிப்பதற்காக செல்வேன். கைகளில் இரண்டு கொசுவர்த்திகளுடன் செல்வேன். ஏனெனில் குடிக்க ஆரம்பித்தால் சினிமா பேசுவோம். அதேபோல் இளையராஜாவை பாடுவோம். நான் பாட ஆரம்பித்தால் எங்கிருந்தோ எனக்கு ஒரு பாட்டில் வந்துவிடும். முக்கியமாக இளையராஜாதான் பலரை குடிகாரனாக மாற்றியது. அவர்தான் குடிக்கு ஆரம்ப புள்ளி. இந்த போதைகளைவிடவும் இளையராஜா மிகப்பெரிய போதை. இப்போது இன்ஸ்டாகிராமை திறந்தாலே எல்லோரும் நடிக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்க்கும்போது மூக்கிலேயே குத்த வேண்டும் என்று தோன்றுகிறது" என்றார்.
அருள்தாஸ் கண்டனம்: மிஷ்கினின் இந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் 2K லவ் ஸ்டோரி படத்தின் விழா இன்று சென்னையில் நடந்தது. அப்போது மேடையில் பேசிய நடிகர் அருள்தாஸ், "மிஷ்கின் சமீபத்தில் ஒரு மேடையில் பேசினார். பார்ப்பதற்கே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. எவ்வளவு அநாகரீகமாக பேச முடியுமோ அவ்வளவு பேசியிருக்கிறார். இந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமாவை எல்லோரும் மதிக்கிறார்கள். ஆனால் மிஷ்கின் பேசியது தலைகுனிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.
அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?: யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வாடா தம்பி, போடா தம்பி என்று சொல்லலாம். ஆனால் எதிரில் இருப்பவர் நம்மை அண்ணன் என்று நினைக்க வேண்டும். இவரை யார் அண்ணன் என்று நினைக்கிறார்கள் என தெரியவில்லை. பாலா 25ல் சென்று பாலாவை அவன் இவன் என்கிறார்; சமீபத்திய மேடையில் இளையராஜாவை அவன் என்று சொல்கிறார். நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?.. வெற்றிமாறன், அமீரை தவிர்த்து எல்லோரும் குடிக்கிறோம் என்று சொல்கிறார்.
இவரா வந்து ஊத்திக்கொடுத்தார். ஏற்கனவே சினிமாக்காரர்கள் என்றாலே கிளுகிளு என்று இருக்கிறது. இவர் ஒரு போலி புத்திசாலி. உலக சினிமாக்களை காப்பி அடித்து படங்கள் எடுப்பவர். மிஷ்கின் ஒன்றும் பாலா, வெற்றிமாறன், அமீர், பா.இரஞ்சித் போன்று மண் சார்ந்த படங்களை எடுப்பவர் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











