அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்.. என்னதான் நடக்கிறது?
சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் தான் லொள்ளு சபா சேஷு மற்றும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் மாராடைப்பால் உயிரிழந்தனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் அருள்மணியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகரும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி உயிரிழந்தது ரசிகர்களையும் அதிமுக கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அழகி, தென்றல், தாண்டவக்கோனே என பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான் நடிகர் அருள்மணி.
மாரடைப்பால் மரணம்: நடிகரும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக ராயப்பேட்டா மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சினிமாவில் அருள்மணி: குணசித்திர நடிகராக சினிமாவில் கவனம் ஈர்த்தவர் அருள்மணி. அழகி, தென்றல், சிங்கம், லிங்கா, தாண்டவக்கோனே மற்றும் தர்மசீலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி அரசியலில் அதிக ஆர்வத்தை செலுத்தி வந்த அருள்மணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
நட்சத்திர பேச்சாளர்: கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு பல ஊர்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வந்தார் அருள்மணி. நேற்று சென்னை திரும்பிய அவர், சற்று ஓய்வெடுத்து வந்த நிலையில், தீடிரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை எவ்வளவு போராடியும் காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு வயது 65.
தொடரும் சோகம்: மாரடைப்பு மரணங்கள் சமீப காலமாக சினிமா உலகினரை போட்டு வாட்டி வதைத்து வருகிறது. 40 வயது முதல் 60 வயது நபர்கள் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. பிரபலங்கள் தங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு அதற்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என கண்டுக் கொள்ளாமல் நமக்கு ஒன்றும் ஆகாது என இருப்பது பல பாதிப்புகளையும் வேதனைகளையும் உண்டு செய்யும் என தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











