நடிகர் அருண் பாண்டியனுக்கு நெஞ்சுவலி.. கொரோனா பாசிட்டிவ்.. தடுப்பூசி காப்பாற்றியதாக மகள் ட்வீட்!
சென்னை: நடிகர் அருண் பாண்டியனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சரியாகி விட்டதாக நடிகையும் அவரது மகளுமான கீர்த்தி பாண்டியன் பதிவிட்டுள்ள நீண்ட பதிவு வைரலாகி வருகிறது.
Recommended Video
ஊமை விழிகள், இணைந்த கைகள் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அருண் பாண்டியன்.
சமீபத்தில் தனது மகள் கீர்த்தி பாண்டியன் உடன் இணைந்து அன்பிற்கினியாள் படத்தில் நடித்திருந்தார்.

நெஞ்சு வலி
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் அருண் பாண்டியனுக்கு கடந்த மாதம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என்று வந்ததும் ஒட்டுமொத்த குடும்பமே பயத்தில் நடுங்கியதாக நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு போட்டு தெரிவித்துள்ளார்.

நலமுடன் இருக்கிறார்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அருண் பாண்டியனுக்கு கொரோனா நெகட்டிவ் ஆகி விட்டதாகவும், நெஞ்சு வலி காரணமாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட்டும் வெற்றிகரமாக செய்யப்பட்டு தற்போது நடிகர் அருண் பாண்டியன் பூரண நலத்துடன் இருக்கிறார் என மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கீர்த்தி பாண்டியன் அந்த பதிவை போட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி
62 வயதாகும் நடிகர் அருண் பாண்டியனுக்கு கொரோனா பாசிட்டிவ் உடன் நெஞ்சு வலியும் ஏற்பட்ட நிலையில், நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என குடும்பமே பயந்ததாகவும், ஆனால், அப்பா கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எடுத்துக் கொண்டதால் மிகவும் லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே ஏற்பட்டு மருத்துவர்களின் உதவியால் தற்போது நலமுடன் உள்ளார் என்றும் கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
🙏🏾OfficialMMHRC
— Keerthi Pandian (iKeerthiPandian) May 7, 2021
#gratitude #healthcare #fightagainstcorona #vaccination pic.twitter.com/UAFXuoS9M0
தடுப்பூசி போட்டுக்கோங்க
கொரோனா இரண்டாவது அலை நம் நாட்டை ரொம்ப மோசமாக தாக்கி வரும் நிலையில், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் பயப்படாமல் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
நடிகர் அருண் பாண்டியனின் உடல் நிலை குறித்து அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள், முழுமையான குணம் பெற்று அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த கொரோனா பரவல் அதிகமாக உள்ள சூழ்நிலையில், ஒட்டுமொத்த குடும்பமே பாதுகாப்புடன் இருங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











