திருமணம் செய்து கொள்வதாக ரூ.70 லட்சம் மோசடி.. சைபர் க்ரைம் போலீஸ் முன்பு ஆஜாரான நடிகர் ஆர்யா!
சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் அளித்த புகாரில் நடிகர் ஆர்யா சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்பு நேரில் ஆஜரானார்.
Recommended Video
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
அந்த புகாரில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆர்யாவுக்கு எதிராக வழக்கு
இந்த புகார் மனு உரிய விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதாவது கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி'க்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சாயிஷாவை விவாகரத்து செய்வதாக வாக்குறுதி
அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். மேலும் பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்ணும் நடிகையுமான சாயிஷா பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாக கூறினார். மேலும் 6 மாதத்தில் விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் மனுவில் தெரிவித்தார்.

சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு
இந்த மனு கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ஆர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா, நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்.

விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஆர்யா
அங்கு சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார் நடிகர் ஆர்யா. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை
விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் ஆர்யாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் நடிகர் ஆர்யா எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் சார்பட்டா பரம்பரை படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











