அவமானப்படுத்தப்பட்ட நடிகர்?.. பற்றி எரியும் மலையாள சினிமா.. ஆசிஃப் அலி வைத்த முற்றுப்புள்ளி
திருவனந்தபுரம்: கேரளாவின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் எம்.டி.வாசுதேவ நாயர். அவர் எழுதிய எட்டு கதைகளை தேர்ந்தெடுத்து அவை ஆந்தாலஜி படங்களாக உருவாகியிருக்கின்றன. 9 இயக்குநர்கள் இயக்கும் 9 படங்களில் மோகன் லால், மம்மூட்டி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆசிஃப் அலி அவமானப்படுத்தப்பட்டதாக உருவான சர்ச்சைக்கு அவரே இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
மலையாள சினிமா எப்போதும் தனித்துவம் வாய்ந்தது என்ற கூற்று கடந்த பல காலமாகவே உண்டு. அதனை நிரூபிக்கும் விதமாகத்தான் அந்த மொழியில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் இருக்கின்றன. மஞ்சும்மல் பாய்ஸ், பிரம்மயுகம், பிரேமலு, ஆடுஜீவிதம், குருவாயூர் அம்பல நடையில் என அப்படிப்பட்ட படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கின்றன. மேற்கூறிய படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியமான முயற்சி: குறிப்பாக அங்கு நாவல்களையும், உண்மை சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து படங்கள் உருவாவது அதிகரித்திருக்கிறது. மஞ்சும்மல் பாய்ஸ் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதேபோல் ஆடுஜீவிதம் படமும் பென் யாமின் எழுதிய நாவலை மையமாக வைத்து உருவானது. இப்போது அடுத்தக்கட்ட முயற்சியை கையில் எடுத்திருக்கிறது மலையாள திரையுலகம்.
என்ன முயற்சி: அதாவது கேரளாவில் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவர் எம்.டி.வாசுதேவ நாயர். எழுத்தாளராக மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியராகவும் ஜொலித்தவர். அவர் எழுதிய கதைகளில் எட்டு கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு; 8 படங்களாக உருவாக்கி மனோரதங்கள் என்ற பெயரில் ஆந்தாலஜியாக ஆகஸ்ட 15ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இதில் மம்மூட்டி, மோகன் லால், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மலையாள டாப் ஸ்டார்கள் ஒரு ஆந்தாலஜிக்காக இணைந்திருப்பதாக மிகப்பெரிய ஆரோக்கியமான ஒன்றாகும்.
சர்ச்சை: இந்த ஆந்தாலஜியின் ட்ரெய்லர் சமீபத்தில் கமல் ஹாசனால் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்தான் ஒரு சர்ச்சை வெடித்தது. அதாவது 9 படங்களில் ஒன்றான சொர்க்கம் திறக்கும் தேசம் என்ற ஒரு படத்துக்கு இசையமைத்த ரமேஷ் நாராயணனுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அவருக்கு வழங்க நடிகர் ஆசிஃப் அலி அழைக்கப்பட்டார். அதன்படி அவரும் ரமேஷுக்கு விருதை கொடுத்தார். ஆனால் அவரிடமிருந்து விருதை வாங்கிய ரமேஷ்; படத்தின் இயக்குநரான ஜெயராஜை அழைத்து அவரிடம் அந்த விருதை கொடுத்து பெற்றுக்கொண்டார்.
அவமானப்படுத்தப்பட்ட ஆசிஃப்: ரமேஷ் நாராயணனின் இந்த செயல் ஆசிஃப் அலியை அவமானப்படுத்தப்பட்டதுபோல் ஆகிவிட்டதாக சர்ச்சை உருவானது. இது கேரள திரையுலகத்தில் பெரும் பேசுபொருளாகி ரமேஷுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. இதனை கவனித்த ரமேஷ் நாராயணன், 'நான் ஆசிஃப் அலி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரை அவமானப்படுத்தும்படி நடக்கவில்லை. அதேபோல் மற்ற இயக்குநர்களை மேடைக்கு அழைத்தபோது அதில் பணியாற்றியவர்களை அழைத்தார்கள்.ஆனால் ஜெயராஜை அழைத்தபோது என்னை அழைக்கவில்லை என்பது வருத்தம்தான். பிறகு எனக்கு நினைவு பரிசு வழங்கவில்லையா என்று வாசுதேவ நாயர் கேட்ட பிறகு எனக்கு கொடுத்தார்கள். அப்போது எனது இயக்குநரும் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்' என்றார். மேலும், ஆசிஃப் அலியை ரமேஷ் நாராயணன் அவமானப்படுத்தவில்லை என்று ஜெயராஜும் பேசியிருந்தார்.
அம்மா விளக்கம்: இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த சூழலில் மலையாள திரைத்துறை நடிகர் சங்கமான அம்மா தரப்பில் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'கர்வத்துக்கு உங்கள் சிரிப்புதான் சங்கீதம். ஆசிஃப் அலிக்கு அம்மா அமைப்பு முழு ஆதரவை கொடுக்கிறது' என்று பதிவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆசிஃப் அலி இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஆசிஃப்பின் விளக்கம்: அவர் இதுகுறித்து கூறுகையில், "இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. ஆனால் அந்த ஆதரவு மற்றவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரமாக மாறக்கூடாது. நான் கோபப்படுவதையோ, வருத்தப்படுவதையோ என்னோடு நிறுத்திக்கொள்வேன். நான் எப்போதும் வெளிப்படையாக காட்டமாட்டேன். ரமேஷுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் நடப்பதை கவனித்தேன். அவர் இப்போது அனுபவிக்கும் வேதனை எனக்கு புரிகிறது. இதில் எனக்கு வருத்தமோ, குழப்பமோ இல்லை. சர்ச்சையான விஷயமாக இதை நான் பார்க்கவில்லை. ரமேஷிடமும் இதுதொடர்பாக தொலைபேசியில் பேசிவிட்டேன். அவரது பேச்சில் மன்னிப்பு கேட்கும் தொனி இருந்தது. அது எனக்கு வருத்தமாக இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











