கௌரவ பிச்சை எடுத்தாவது வேலையை முடிப்பேன்… விஷால் ஆவேசம்
சென்னை : நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள விஷால், கௌரவ பிச்சை எடுத்து வேலையை முடிப்பேன் என பேசியுள்ளார்.
Recommended Video
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் செல்லும்
தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.

பதவியேற்பு
இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றனர். சென்னை தியாகராஜ நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசர், துணைத் தலைவராக பூச்சி முருகன், பொதுச்செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட வெற்றிபெற்ற 29 உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விஷால் பேச்சு
இதில் பேசிய விஷால், நடிகர் சங்க தேர்தலுக்கு ஆகும் செலவை கட்டடத்திற்கு பயன்படுத்த நாங்கள் நினைத்தோம். அத்துடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் முயற்சித்தோம். ஆனால் எதிரணியினர் இதை போட்டியாக பார்த்தனர். நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றில் 3 ஆண்டுகள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் விஷால் கூறினார்.

கௌரவ பிச்சை
திரும்ப திரும்ப நாங்கள் சொல்வது ஒன்று தான். நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம். சென்னைக்கு வரும் மக்கள் சுற்றுலாத்தளங்களைப் பார்வையிடுவது போல, நடிகர் சங்கத்தையும் பார்வையிடும் அளவுக்கு கட்டுவோம். இந்த கட்டிடத்தை கட்ட 20 கோடிக்கு மேல் பணம் தேவைப்படும், அதற்காக நாங்கள் கௌரவ பிச்சை எடுத்தாவது வேலையை முடிப்போம் என்றார்.


Click it and Unblock the Notifications











