MLA ஹாஸ்டலில் குடியேறிய நடிகர் பாவா லட்சுமணன்.. வீடு கொடுத்து உதவிய அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக், கவுண்டமணி உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த நடிகர் பாவா லட்சுமணன், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகிறார். மருத்துவச் செலவுக்கே பணம் இல்லாமல் தவித்து வந்த நிலையில், தற்போது சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்குவதற்கு அமைச்சர் ராஜ்மோகன் வீடு ஏற்பாடு செய்து கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாவா லட்சுமணன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவரால் வழக்கம்போல் படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பட வாய்ப்புகளும் குறைந்ததால் குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தார். இது குறித்து அண்மையில் அளித்த பேட்டியில், மருத்துவச் செலவுக்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் மிகவும் கஷ்டப்படுவதாக உருக்கமாக பேசியிருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர். குறிப்பாக தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், பாவா லட்சுமணனின் உடல்நிலை குறித்து அறிந்ததும் மருத்துவச் செலவு மற்றும் குடும்பச் செலவுக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். அவரது இந்த மனிதநேய செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படி இருக்கையில், தற்போது பாவா லட்சுமணனின் குடியிருப்பு பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. தமிழக அமைச்சர் ராஜ்மோகன், சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் அவர் தங்குவதற்கு வீடு ஒதுக்கி கொடுத்துள்ளார். அமைச்சர் ராஜ்மோகனை நேரில் சந்தித்து பாவா லட்சுமணன் நன்றி தெரிவித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
ஒரு காலத்தில் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்த பாவா லட்சுமணன், வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஆனால், உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது அவருக்கு திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் தொடர்ந்து உதவி செய்து வருவது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
கஷ்டமான நேரத்தில் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய லெஜண்ட் சரவணன் மற்றும் அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், பாவா லட்சுமணன் விரைவில் முழுமையாக உடல்நலம் பெற்று மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications