கடவுளின் விளையாட்டு பொம்மை மனிதர்கள்.. பவதாரிணி மரணம் குறித்து கண்கலங்கிய பாக்யராஜ்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவின் மகள் பவதாரிணி உயிரிழந்த நிலையில், அஞ்சலி செலுத்த வந்த பாக்யராஜ், உருக்கமாக கண்கலங்கி பேசினார். 1976 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்த பவதாரிணி, 1984 ஆம் ஆண்டு வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் பாடியிருந்தார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் பாடியுள்ள இவர் ராசய்யா படத்தில் காதல் வானிலே பாடலை பாடினார்.
குறிப்பாக பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக தேசிய விருது வென்ற இவர் தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, பரத்வாஜ் உள்ளிட்ட பலரின் இசையிலும் பின்னணி பாடல் பாடியுள்ளார். அத்துடன் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 10 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒருசில ஆல்பம் பாடல்களையும் பாடி உள்ளார்.

பவதாரிணிக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டதை அடுத்து கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் சமீபத்தில் இலங்கைக்கு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தன்னுடைய 47வது வயதில் பவதாரிணி உயிரிழந்தார். எஸ்.என். ராமச்சந்திரன் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.
கண்கலங்கிய பாக்யராஜ்: இலங்கையில் உயிரிழந்த பவதாரணியின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னை எடுத்து வரப்பட்டு, இளையராஜாவின் திநகர் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த பாக்யராஜ், குழந்தைகளோட விளையாட்டு சாமான் பொம்மை. கடவுளுக்கு விளையாட்டு பொம்மை மனிதர்கள். அதனால் தான் என்னமோ இவ்வளவு திறமைகள் இருந்தும், இவ்வளவு சின்ன வயதிலேயே பவதாரிணி போன்றவர்களை கடவுள் அழைத்துச் சென்றுவிட்டார்.
இன்று இறுதி சடங்கு: அதேப்போல இளையராஜா அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பவதாரணி ஆத்மா சாத்தியடைய வேண்டிகிறேன் என்று கண் கலங்கி பேசினார். பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பின், இரவு 10 மணிக்கு பவதாரிணியின் உடல் சாலை மார்க்கமாக இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


Click it and Unblock the Notifications











