KPY பாலாவ விடுங்க.. நம்ம பிளாக் பாண்டிக்கு எவ்வளவு நல்ல மனசு பாருங்க.. நெகிழ்ச்சியான சம்பவம்
சென்னை: நடிகர் பிளாக் பாண்டி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர். சிறு வயதிலேயே பல படங்களில் நடித்த அவர் வளர்ந்த பிறகும் குணசித்திர கதாபாத்திரம், காமெடி ரோல்களை ஏற்று நடித்தார். இருந்தாலும் அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் செய்திருக்கும் செயல் ஒன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
மதுரையை சேர்ந்த பிளாக் பாண்டி சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர். மறைந்த வி.சேகர் இயக்கிய கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர். சினிமாவில் எப்படி ஜொலித்தாரோ அதேபோல் சீரியல்களிலும் நடித்தார். அவர் நடித்த கனா காணும் காலங்கள், கோலங்கள், மெட்டி ஒலி என பல சீரியல்களில் நடித்தார். அவருக்கு பெரிய திருப்புமுனை கொடுத்தது என்றால் கனா காணும் காலங்கள்தான்.
சினிமாவில் அங்காடித் தெரு: வளர்ந்த பிறகும் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும் பெரிய திருப்புமுனை எதுவும் கிடைக்காமல்தான் இருந்தது. அப்போதுதான் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அங்காடித் தெரு பட வாய்ப்பு பாண்டிக்கு அமைந்தது. அதில் தனது காமெடி, எமோஷன் நடிப்பால் அனைரையுமே கட்டிப்போட்டார். ஒட்டுமொத்த ரசிகர்களும் அவரது நடிப்பை பார்த்து வியந்தார்கள்.

வாய்ப்புகள் எதுவும் இல்லை: அங்காடித் தெருவுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் நிச்சயம் அவரை பெரிய குணசித்திர நடிகராகவோ இல்லை காமெடி நடிகராகவோ மாற்றும் என்றுதான் கணிக்கப்பட்டது. ஆனால் அத்தனை கணிப்புகளும் பொய்யாகி பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. தனக்கு வாய்ப்புகள் கிடைக்காதது பற்றி சில பேட்டிகளில் ரொம்பவே சோகமாக பாண்டி பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.
அறக்கட்டளை: சினிமாவில் தனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும்; கிடைத்த வாய்ப்புகளில் வந்த வருமானத்தை வைத்து உதவும் மனிதம் என்ற அறக்கட்டளையை நடத்தி தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார். அந்தவகையில் சில மாணவிகளை படிக்கவும் வைத்திருக்கிறார் அவர். அவரது இந்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. இதுகுறித்து மனம் திறந்து பேசவும் செய்திருக்கிறார் அவர்.
பிளாக் பாண்டி பேட்டி: செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உதவும் மனிதம் என்ற அறக்கட்டளையை ஆரம்பித்திருக்கிறேன். அதன் முன்னெடுப்பில் இலங்கையிலிருந்து 4 மாணவிகளை படிக்க வைத்திருக்கிறேன். இதுவரை 75 பேர்வரை படிக்க வைத்திருக்கிறேன். உலகத்தில் உள்ள தமிழர்கள் சப்போர்ட் செய்கிறார்கள். நிறைய பிள்ளைகள் படிப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இருப்பவர்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நாளை இன்னொரு இடத்திலும் உதவும் வாய்ப்பு கிடைத்தால் உதவுவேன்.
நான் ஒழுங்காக படிக்கவில்லை. அந்த ஆதங்கத்தில்தான் எனது தங்கையை படிக்க வைத்து பொறியியல் பட்டம் வாங்க வைத்திருக்கிறேன். கல்விதான் ஒருவரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும். உலகத்தில் கல்விக்கு நிகர் எதுவும் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











