Vijayakanth: விஜயகாந்த் குறித்து சந்தோஷப்பட அதிகமான விஷயங்கள் இருக்கு.. நினைவுகூர்ந்த சந்திரசேகர்!
சென்னை: நடிகர் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டு, விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். கமல்ஹாசன், சத்யராஜ், விக்ரம், விஷால் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் விஜயகாந்த் குறித்து பேசிக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் நிகழ்ச்சியில் விஜயகாந்தின் சிறப்பை வெளிப்படுத்தும்வகையில் வீடியோவும் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் விஜயகாந்தின் எளிமை வெளிப்படும்வகையில் அவரது அன்னதானம், நடிப்பு உள்ளிட்ட பலவற்றையும் இணைத்திருந்தனர். நிகழ்ச்சியில் அவருடைய நீண்டகால நண்பர் சந்திரசேகர் முதல் உலகநாயகன் கமல்ஹாசன் வரை பலரும் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். நிகழ்ச்சி மிகவும் நெகிழ்சசியாக அமைந்தது.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த் 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் சாதித்தவர். இளைஞராகவும் முதியவராகவும் பல கெட்டப்புகளால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர். அவரது பன்பட்ட நடிப்பால் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்தார் விஜயகாந்த். அவரை கேப்டன் என்றும் புரட்சிக்கலைஞர் என்றும் கூப்பிட்டு மகிழ்ந்தனர் ரசிகர்கள். சினிமா, அரசியல் என பன்முகத்திறமையுடன் ரசிகர்களை சந்தித்த விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் ஓய்வு எடுத்துவந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ம் தேதி காலமானார்.
பன்முகத் திறமை: நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர், அரசியல்கட்சி தலைவர் என பன்முகங்களை கொண்ட விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காவிட்டாலும் நம்முடைய தலைவன் நடமாடிக் கொண்டிருக்கிறார் என்ற நினைப்புடன் இருந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு இடியை கொடுக்கும்வகையில் கடந்த மாதத்தில் அவர் உயிரிழந்தது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது இறுதி ஊர்வலம் மக்கள் அவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாத திரைத்துறை பிரபலங்களும் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்ச்சி: இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்றைய தினம் விஜயகாந்திற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் மட்டுமில்லாமல் பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொண்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், விஷால், நாசர், சத்யராஜ், சதீஷ், கருணாகரன், அம்பிகா, சச்சு, வடிவுக்கரசி உள்ளிட்டவர்களும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். பலரும் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி தங்களது மரியாதையை செலுத்தினர். மேலும் மேடையேறி விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்தனர்.
சந்திரசேகர் நெகிழ்ச்சி: சினிமாமீது கொண்ட விருப்பத்தால் சென்னைக்கு வந்து பல போராட்டங்களை தாண்டி சாதித்தவர் விஜயகாந்த். அவரது ஆரம்ப காலத்தில் அவருடன் இருந்தவர்களில் நடிகர் வாகை சந்திரசேகரும் ஒருவர். தங்களது துவக்க காலத்தில் சுக துக்கங்களை தாங்கள் பகிர்ந்து கொண்டதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் சந்திரசேகர். மேலும் விஜயகாந்த் குறித்து நினைவில் கொள்வதற்கு அதிகமான நல்ல விஷயங்கள் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். விஜயகாந்த் தன்னுடைய வாழ்நாளில் அனைத்தையும் சாதித்ததாகவும் அவரை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











