மகாசிவராத்திரியும் மயில்சாமி மறைவும்.. சிவபக்தர் சிவபதம் அடைந்தார்.. நடிகர் சார்லி உருக்கம்!
சென்னை: நடிகர் மயில்சாமி தீவிர சிவபக்தர், மகா சிவராத்திரி அன்றே அவர் மறைந்ததால் சிவபதம் அடைந்து விட்டார் என நகைச்சுவை நடிகர் சார்லி தனது இரங்கலில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வரும் நடிகர் மயில்சாமி திடீரென உடல்நலக் குறைவு காரணமாக காலமானது ஒட்டுமொத்த கோலிவுட்டையே கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.
அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து மக்கள் மனங்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் மயில்சாமி.

விடிய விடிய கண் விழித்து
தீவிர சிவ பக்தரான நடிகர் மயில்சாமி நேற்று இரவு கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் கண் விழித்து சாமி தரிசனம் செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அதிகாலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் மயில்சாமி உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவ பக்தர் மயில்சாமி - சார்லி உருக்கம்
நடிகர் மயில்சாமி ஒரு தீவிரமான சிவ பக்தர் என நகைச்சுவை நடிகர் சார்லி தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். சிவ பக்தரான மயில்சாமி மகா சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்ட நிலையில், அவர் காலமான தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் சார்லி சிவ பக்தரான மயில்சாமி இறைவனடி சேர்ந்து விட்டார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடைசி டப்பிங்
'தண்டாயுதபாணி', 'நாயகன்', 'பில்லா பாண்டி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சரவண சக்தி இயக்கத்தில் அறிமுக நடிகர் அங்கயற்கண்ணன் நடிப்பில் உருவாகி வரும் கிளாஸ்மேட்ஸ் படத்தில் நடித்துள்ள மயில்சாமி கடைசியாக அந்த படத்திற்கு டப்பிங் பேசிய வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் உதவி
சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்த நடிகர் மயில்சாமி கொரோனா காலத்தில் தனது ஏரியா மக்களுக்கு உணவு வழங்கி பொது சேவையும் செய்துள்ளார். வெள்ளை மனம் கொண்டவர் மயில்சாமி என்றும் எப்போதும் சிரித்தபடி தான் அனைவரிடத்திலும் பேசுவார் என்றும் முகம் சுளித்ததே கிடையாது என பிரபலங்கள் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் இரங்கல்
விவேக் உடன் டான்ஸ் சாமியராக நடித்தது, அஜித், விஜய் படங்களில் நடித்த காட்சிகளை ஷேர் செய்து சமூக வலைதளங்களில் #Mayilsamy ஹாஷ்டேக்கை போட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் உன்னத கலைஞரான மயில்சாமிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பல கோடி பேரை சிரிக்க வைத்து வந்த மயில்சாமி இன்று பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











