ஷூட்டிங்கிற்கு முன் பரிசோதனை.. மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் சிகிச்சை!
ஐதராபாத்: பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா பரவல், இந்தியாவில் இப்போது குறையத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பு நடவடிக்கை
கொரோனா தொற்றுக்கான மருந்துகள் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. தினமும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. இதனால் அதிகமானவர்கள் குணமடைந்து வருகின்றனர்.

அதிகரித்து உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 45,903 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,53,657-ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,611 ஆக அதிகரித்துள்ளது.

குணமாகி மீண்டனர்
இந்த தொற்று நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் என யாரையும் விடவில்லை. மலையாள ஹீரோ பிருத்விராஜ், தமன்னா, ஐஸ்வர்யா ராய், ராஜமவுலி, விஷால், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நிக்கி கல்ராணி, ஜெனிலியா, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர் உட்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.

டாக்டர் ராஜசேகர்
இப்போது பிரபல நடிகர், டாக்டர் ராஜசேகர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வீட்டில் தனிமை
ஆச்சாரியா படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பு, முறைப்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நானும் செய்தேன். எதிர்பாராதவிதமாக பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 5 நாட்களில் என்னை சந்தித்தவர்கள், கொரோனா சோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்
என கூறியுள்ளார்.

முதல் அமைச்சர்
இதையடுத்து ஆச்சாரியா படப்பிடிப்புக்கு சிக்கில் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து இருந்தார். உடன் நடிகர் நாகார்ஜுனாவும் சென்றிருந்தார். மழை வெள்ள நிவாரண நிதியை அவரிடம் வழங்கி இருந்தனர்.


Click it and Unblock the Notifications











