Vikram: சியான் விக்ரம் படத்தில் இணையும் லோகேஷ் கனகராஜ்.. மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி!
சென்னை: நடிகர் சியான் விக்ரம் எப்போதுமே ரசிகர்களுக்கு விருப்பமான நடிகராக தன்னுடைய கேரியரை தொடர்ந்து வருகிறார்.
தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்தப் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தங்கலான் லுக்கிலிருந்து மாறியுள்ளார் விக்ரம். இந்நிலையில் அவரது அடுத்தப்படம் சியான்62 படம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையும் நடிகர் விக்ரம்: நடிகர் சியான் விக்ரம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக கோலிவுட்டில் தொடர்ந்து இருந்து வருகிறார். இதற்காக அவர் கடந்துவந்த பயணம் மிகவும் கரடுமுரடானது. தான் ஏற்கும் கேரக்டருக்காக, தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து மிகப்பெரிய ரிஸ்க்குகளை எடுப்பார் விக்ரம். அந்த வகையில் அவருக்கு ஏற்றம் கொடுத்த சேது படம் முதல் தற்போது தங்கலான் படம் வரை அவரது மெனக்கெடல்கள் மிகவும் அதீதமாக காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் -மணிரத்னம் கூட்டணியில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு மிகவும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. ஆதித்த கரிகாலனாக விக்ரம் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்த நிலையில், அவரது உடல்மொழி, காட்சி அமைப்புகளுக்கு மிகவும் சிறப்பாக பொருந்தியது. காதல் தோல்வி கொடுத்த ஏமாற்றம், வலி உள்ளிட்டவற்றை அவர் படத்தில் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் பீரியட் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், சில பேட்ச் வேலைகளை தற்போது படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். தங்கலான் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கலான் படத்தை விக்ரம் முடித்துள்ள நிலையில் அவரது அடுத்தப்படமான சியான்62 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஒரு படம் முடிவதற்கு முன்னதாகவே அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை மேற்கொள்ளும் போக்கு கோலிவுட்டில் நடிகர்களிடையே காணப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் தனது அடுத்தப்படத்தை மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுக்கும் வகையில் சிறிது கால இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் சியான்62 படத்திற்காக லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் மகேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை லோகேஷ் கனகராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் -லலித்குமார் கூட்டணி முன்னதாக கோப்ரா படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய்யின் லியோ படத்தையும் லலித்குமார்தான் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் தங்கலான் படத்திற்காக நீண்ட தாடி, மீசை, தலைமுடியுடன் காணப்பட்ட விக்ரம், தற்போது அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்து வருகிறார். முன்னதாக தாடியை முழுமையாக ஷேவ் செய்து, தலைமுடியை லேசாக ட்ரிம் செய்திருந்தார் விக்ரம். தற்போது முடியையும் நன்றாக குறைத்து அடுத்த லுக்கை வெளிப்படுத்தியுள்ளார். இந்த லுக்கை பார்த்த ரசிகர்கள் சியான் 62 படத்திற்காக அவர் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











