விஜய் நடிக்க மாட்டேன்னு சொன்னதெல்லாம் வேஸ்ட்.. அரசியலில் காசு செலவாகும்.. எங்க போவார்?- பிரபல நடிகர்
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான வேலைகளில் செம பிசியாக உள்ளார். இது ஒருபுறம் இருக்க, இவரது கடைசிப் படமான தளபதி 69 படத்திற்கான ப்ரீ புரடெக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது. மாநாடு முடிந்த சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிக் கொள்ளலாம் என விஜய் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றனர்.
இப்படியான நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருந்திருக்கலாம் என நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய்யை தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் எனக் குறிப்பிடலாம். தமிழ் சினிமாவில் கிராண்ட் ஓபனிங் உள்ள மாஸ் ஹீரோ, அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கோட் படத்தில் இவரது சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடிகள் என தயாரிப்பாளரே ஒரு பேட்டியில் கூறினார். மேலும் அவருக்கு சம்பளம் இவ்வளவு கொடுத்தாலும் அவரது படத்தை தயாரிப்பதால் எங்களுக்கு லாபம் கிடைக்கின்றது. அதேபோல் கடைசி படமான தளபதி 69இல் இவரது சம்பளம் ரூபாய் 275 கோடிகள் என கூறப்பட்டது. இந்தச் சம்பளம் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் சம்பளத்தை விடவும் அதிகம் எனவும் செய்திகள் வெளியானது.

இப்படியான நிலையில், தளபதி 69 படம் அறிவிக்கும்போதே படம் அடுத்த ஆண்டு அதாவது 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த தகவலைப் பார்த்த ரசிகர்கள் அக்டோபரில் தீபாவளி உட்பட மொத்தம் மூன்று விழாக்கள் வருகின்றது. இந்த மூன்று விழாக்களில் எதாவது ஒன்றில் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசி வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

எனர்ஜி கொடுக்கும் விஜய்: போஸ் வெங்கட் பேசுகையில், " எனக்கு ஒரு காலத்தில் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைப் பார்த்தால் என்ன உணர்வு வருமோ, என்ன எனர்ஜி எனக்கு கிடைக்குமோ, அது இன்றைக்கு விஜய்யைப் பார்க்கும்போது கிடைக்கின்றது.

விஜய் அரசியலில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றால், அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்திருக்கனும். சுமார் ரூபாய் 200 கோடிகள் வாங்குகின்றார். நடிக்க மாட்டேன் எனக் கூறியது வேஸ்ட். கோட் படத்தை நான் என் குடும்பத்துடன் நான்கு முறை பார்த்தேன். ஆனால் நாங்கள் யாரும் அவருக்கு ஓட்டு போடமாட்டோம். ஆனால் தமிழ் சினிமாவில் தற்போது அவரைவிட சிறந்த நடிகர் இல்லை. எனக்கு விஜய் படத்தின் கதை, அது நல்ல படம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன், எனக்கு விஜய் சார் வந்தாப் போதும்.

மாநாடு: என்னைப் பொறுத்தவரையில் விஜய் சார் கதாநாயகனாக நடித்துக் கொண்டே இதே வேலையைச் செய்திருக்கலாம். இன்னும் ஒரு 20 வருசத்துக்கு நடித்துக் கொண்டே இந்த வேலையைப் பார்த்திருக்கலாம். ஏனென்றால் செலவு செய்யவேண்டும். அரசியல் என்பது சாதாரண விஷயம் கிடையாது. கோடிகளில் செலவாகிக் கொண்டே இருக்கும். இப்போது மாநாடு வைத்துள்ளார்.
செலவுக்கு என்ன செய்வார்?: மாநாடுக்கு எப்படிப் பார்த்தாலும் ரூபாய் 60 கோடிகள் முதல் 70 கோடிகள் வரை செலவாகும். இப்படி 4 முதல் 5 மாநாடுகள் நடத்தினால் அவரிடம் இருக்கும் பணம் செலவாகிவிடும். இப்படியான நிலையில் விஜய் பணத்திற்கு என்ன செய்வார்? அதற்கு படத்தில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட்டிருக்கலாம்" என பேசியுள்ளார். இவரது பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. போஸ் வெங்கட் இயக்கத்தில் அடுத்து விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படம் வெளியாகவுள்ளது. இவர் ஏற்கனவே கன்னி மாடம் என்ற படத்தை இயக்கி பாராட்டுகளைப் பெற்றார்.


Click it and Unblock the Notifications











