தயாரிப்பாளர் சங்கத்தில் விஷமிகள்... பரபரப்பு கிளப்பும் நாயகன்!
ஔடதம் படத்தின் பேனா அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் விஷமிகள் இருப்பதாக புதுமுக நடிகர் நேதாஜி பிரபு புகார் தெரிவித்துள்ளார்.
ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ஒளடதம். இப்படத்தை ரமணி இயக்கியுள்ளார். மருத்துவத்துறையில் நடைபெறும் மோசடிகளை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது .
இப்படத்தினை பிரபலப்படுத்தும் முயற்சியாக ஒளடதம் என்ற பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் பாக்யராஜ் , பேரரசு, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டு, பேனாவை அறிமுகப்படுத்தினர். திரையரங்குகளில் பேனாக்களை விநியோகிக்கும் போது, தமிழில் கையெழுத்திடு என்கிற பிரச்சாரத்தையும் படக் குழு மேற்கொள்ளவிருக்கிறது

ஔடதம் பேனா
பேனா அறிமுக விழாவில் பேசிய ஔடதம் படத்தின் தயாரிப்பாளர் நேதாஜி பிரபு, தயாரிப்பாளர்கள் சங்கம் விஷமிகள் சிலர் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

புதிய கதை
"நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்து அதிலுள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன. அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது? இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவானது.

மருந்தில் விழிப்புணர்வு
நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம் உள்ள விழிப்புணர்வு, நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை. எவ்வளவோ தடை செய்யப்பட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இதுபற்றி யாருக்கும் தெரிவதில்லை. நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட்கள் படமெடுத்துள்ளோம்.

வெளியிடுவது சிரமம்
இப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது.

ஏமாற்றும் கூட்டம்
தயாரிப்பாளர் கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ, தயாரிப்பாளர் சங்கத்திலோ ஒரு தயாரிப்பாளர் என்று உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள்.

ஒன்றுமே செய்ய முடியாது
ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

விஷமிகளை விரட்டுங்கள்
இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும். என்னைப் போன்ற புதிய தயாரிப்பாளர்கள் இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால் தான் சினிமா உருப்படும்," என ஆதங்கப்பட்டார் நேதாஜி பிரபு.


Click it and Unblock the Notifications











