Vijayakanth: திரையிலும் தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன்.. விஜயகாந்த் மறைவிற்கு அமீர் அஞ்சலி!
சென்னை: நடிகர் விஜயகாந்த் தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரை வாழ்க்கையிலும் ஹீரோவாக திகழ்ந்தவர். திரையில் சாதிக்க விரும்பிய பலருக்கும் வேடந்தாங்கலாக இருந்தவர். 1979ல் துவங்கிய விஜயகாந்தின் திரைப்பயணம் தொடர்ந்து 30 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கட்டிப் போட்டது. பல அழுத்தமான கதைக்களங்களில் துவக்கத்தில் நடித்துள்ள விஜயகாந்த், அதிரடி நாயகனாக பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பறந்து பறந்து இவர் நடித்துள்ள பல ஆக்ஷன் காட்சிகளுக்கு தற்போதும் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் சிறப்பாக திகழ்ந்த விஜயகாந்த், அரசியலிலும் சாதனை படைத்தார். ஓடி ஓடி நிற்கக்கூட நேரமில்லாமல் நடித்துள்ளார் விஜயகாந்த். ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்த சாதனையையும் விஜயகாந்த் படைத்துள்ளார். தமிழில் மட்டுமே நடித்தவர் என்ற பெருமையும் விஜயகாந்திற்கு உண்டு. அவரது படங்கள் தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால் அவர் தமிழை தவிர மற்ற மொழிப்படங்களில் நடிக்கவில்லை. வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் போராடியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் விஜயகாந்த்.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த் தமிழில் 150 படங்களுக்கு மேல் நடித்தவர். அதிரடி ஆக்ஷன் படங்களில் மட்டுமில்லாமல் அழுத்தமான கதைக்களங்களிலும் நடித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் விஜயகாந்த். அரசியலிலும் திறம்பட செயல்பட்ட விஜயகாந்த், தேமுதிக கட்சியை நிறுவி அதன்மூலம் பல நலப்பணிகளை செய்தவர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவிலும் அரசியலில் இருந்தும் விலகியிருந்த விஜயகாந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
விஜயகாந்த் மறைவு: இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு நலம்பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதமர், முதலமைச்சர் என பல்வேறு தரப்பினரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஏழைத்தோழன் என அமீர் பாராட்டு: இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான அமீர் விஜயகாந்த் மறைவிற்கு தன்னுடைய இரங்கலை அறிக்கையொன்றின்மூலம் தெரிவித்துள்ளார். ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன் என்று விஜயகாந்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள அமீர், அநீதியை தட்டிக்கேட்கும் துணிச்சல்காரர் வாழ்ந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மறைவு உண்மையிலேயே தமிழ் திரையுலகிற்கும் இந்திய அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார். திரையிலும் தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் என்றும் பாராட்டியுள்ளார்.
மண்ணின் மைந்தன் என புகழாரம்: அவருடன் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தான் இருந்த நிலையில் அவரது திடீர் மறைவு பேரதிர்ச்சியிலும் மீளாத்துயரிலும் தன்னை ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் உச்ச நடிகராகவும் அரசியலில் பெரும் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் ஒட்டு மொத்த தமிழக மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை விஜயகாந்த் பெற்றுள்ளதாகவும் அமீர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜாதி -மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர், மண்ணின் மைந்தன் கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா இறைவனது திருவடியில் அமைதியடைய வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











