அக்காவைப் பார்த்து விழா மேடையில் கண்ணீர் சிந்திய எஸ்.ஜே.சூர்யா
சென்னை: விருது விழா மேடை ஒன்றில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொடுத்த சர்பிரைஸ் தாங்காமல் அவ்விடத்திலேயே கண்ணீர் சிந்தியிருக்கிறார் இயக்குநர் நடிகர் எஸ்ஜே சூர்யா.
கலாட்டா கிரவுன் 2022 என்ற அந்த விழாவில் எஸ்ஜே சூர்யாவிற்கு மாநாடு திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகர் விருது வழங்கப்பட்டது.
அப்போது விழா மேடையில் திடீரென தனது அக்கா வர, இன்ப அதிர்ச்சியடைந்த எஸ்ஜே சூர்யா கண்ணீர் சிந்தி நெகிழ்ச்சியடைந்தார்.

தலைவரே.. தலைவரே
கலாட்டா கிரவுன் 2022 விருது விழாவை டிடி தொகுத்து வழங்க, விருதைப் பெற்றுக் கொண்ட எஸ்.ஜே சூர்யா பேசுகையில், "நடிப்பிற்கு விருது வாங்குவதில் மிக்க மகிழ்ச்சி. காரணம் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் செல்வா சார் (இயக்குநர் செல்வராகவன்) கையால் இவ்விருதை வாங்குவதில் மகிழ்ச்சி. மாநாடு படத்தில் வாய்ப்பளித்த வெங்கட்பிரபுவுக்கு நன்றி, ஹீரோ சிம்புவுக்கு நன்றி. இந்த படத்தோட கலெக்ஷன் 100 கோடியைத் தொட்டிருக்கிறது. ஹிந்தி ரைட்ஸ் மட்டுமே மிகப் பெரிய தொகைக்கு எட்டியிருக்கிறது. மாநாடுவில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.
Recommended Video

நடிகர் விஜயகுமார் அப்பா கதாப்பாத்திரம்
குஷி திரைப்படத்தில் நடிகர் விஜயகுமாரை தனது அப்பாவைப் போலவே மீசை வைக்க வைத்ததாகவும், அதே போல், அத்திரைப்படத்தில் ஜோதிகாவை செல்வி ..செல்வி என விஜயகுமார் அழைப்பது தனது தந்தை தனது சகோதரி செல்வியை அப்படி தான் அழைப்பார் என்றும் எஸ்ஜே சூர்யா தெரிவித்தார். மேலும், அவ்விருது விழாவில் எஸ்ஜே சூர்யாவிற்கு சர்பிரைசாக அவரது சொந்த ஊர், படித்த பள்ளி, உடன் படித்த நண்பர்கள் ஆகியோரை பேட்டி எடுத்து அதை எஸ்ஜே சூர்யாவின் முன் AV ஆகப் போட நெகிழ்ந்து போனார்.

சர்பிரைஸ் கொடுத்த அக்கா
எஸ்ஜே சூர்யா மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது உடன் பிறந்த அக்காவும், மாமாவும் அங்கு வர, மிகவும் ஆச்சரியப்பட்டு போன எஸ்ஜே சூர்யா, சட்டென ஒரு கணம் தென்காசி ஜஸ்டின் செல்வராஜாக அப்படியே வெள்ளந்தியாக மாறிப் போனார். "இது தான் எங்க அக்கா செல்வி, எங்க அத்தான்" என அவர் சொன்ன விதம் அனைவரையும் நெகிழ வைத்தது. பின் பேசிக் கொண்டிருக்கும் போதே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து, சென்னைக்கு வந்து, சினிமாவில ஒரு சாதாரண ஆளாக சிறிய சிறிய வேடங்களில் தலை காட்டி, பின்னர் இயக்குநர் ஆகி, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா குறித்து டிடி பேசியது அவ்விழாவில் இருந்த அத்தனை பேரையும் ரசிக்கவும், வியக்கவும் வைத்தது.

வித்தியாசமான நடிப்பு
இயக்குநராக இருந்து திடீரென நியூ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான போது, ரசிகர்கள் ஒரு தயக்கத்துடனேயே தான் எஸ்.ஜே சூர்யாவை ஏற்றுக் கொண்டனர். காரணம், அப்போது விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அழகான முகவெட்டு கொண்ட நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். இருந்தாலும் தனது வித்தியாசமான நடிப்பாலும், வசன உச்சரிப்பினாலும் அனைவரையும் ரசிக்க வைத்தார். மேலும், எஸ்ஜே சூர்யா தனது படங்களில் இரட்டை அர்த்த வசனங்களும், கவர்ச்சியையும் அதிக வைத்ததால், ஆரம்பத்தில் அடல்ட் ஒன்லி கண்டண்ட் நடிகராகவே பார்க்கப்பட்டார் என்பது உண்மை. ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு இறைவி திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதிலிருந்து தற்போது டான் வரை இளைஞர்களின் டிரெண்ட் செட்டராகி போனார் எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











