ஏழைகளை ஏமாற்றுபவர்களுக்கு வைத்த பெயர் பிக்கிலி.. வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
சென்னை : நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளோடு வலம்வந்துக்கொண்டிருக்கிறார் விஜய் ஆன்டணி.
அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.
மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆன்டணியே தயாரித்துள்ள நிலையில், படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசாகவுள்ளது.

நடிகர் விஜய் ஆன்டணி
நடிகர் விஜய் ஆன்டணி நான் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், காளி, சைத்தான், எமன், இந்தியா பாகிஸ்தான் என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் இவரது நடிப்பு கலவையான விமர்சனங்களை பெற, தான் நடிகன் இல்லை, தான் ஒரு ஹீரோ என்று அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் சமீப காலங்களில் இவரது நடிப்பில் முதிர்ச்சிக் காணப்படுகிறது.

பிச்சைக்காரன் படம்
இவரது நடிப்பில் பெஸ்டாக அமைந்த படம் பிச்சைக்காரன். இந்தப் படம் வெளியாகி 7 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது பிச்சைக்காரன் 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை விஜய் ஆன்டணியே இயக்கி, தயாரித்து, இசையமைத்து நடிக்கவும் செய்துள்ளார். அந்த அளவிற்கு பிரயத்தனம் செய்த அவருக்கு, படத்தின் சூட்டிங்கின்போது பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டில் ரிலீஸ்
இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்த விஜய் ஆன்டணி, தற்போது படத்தின் சூட்டிங்கை முடித்து, அடுத்த மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார். படத்தின் முதல் பாகம் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தப் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷனை விஜய் ஆன்டணி துவக்கியுள்ளார்.

பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை இன்றைய தினம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது பிக்கிலி என்ற கேரக்டரை உருவாக்கியிருந்தார். சமீபத்தில் தான் படத்தில் ஆன்டி பிக்கிலி என்று வெளிப்படுத்தினார். இதனிடையே நேற்றைய தினம் வித்தியாசமான உருவத்துடன் ஒரு போஸ்டரை வெளியிட்டு அதுதான் பிக்கிலி என்று தெரிவித்திருந்தார். அதைப் பார்த்து நாம் பயப்படலாம் என்றும் கூறியிருந்தார்.

பிக்கிலி கேரக்டர்
இந்நிலையில் இன்று மாலை படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்ட விஜய் ஆன்டணி, முன்னதாக ஏழைகளை சுரண்டி கொழிக்கும் நபர்களே பிக்கிலி என்றும் தான் அவர்களுக்கு அந்தப் பெயரை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அந்தப் பாடல் அமைந்துள்ளது. வீடியோ பாடலாகவே அந்தப் பாடலை வெளியிட்டுள்ளார் விஜய் ஆன்டணி. படத்தில் அவருக்கு காவ்யா தப்பார் ஜோடியாகியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
விஜய் ஆன்டணியின் நடிப்பில் அடுத்ததாக பிச்சைக்காரன் 2 படம் ரிலீசாக உள்ள நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. காக்கி, அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளிமயில் , ரத்தம் என அவரது படங்களின் பட்டியில் நீளுகிறது. கடந்த 2021ம் ஆண்டில் விஜய் ஆன்டணியின் கோடியில் ஒருவன் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் குறைந்த இடைவெளிகளில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











