முன்பைவிட சந்தோஷமாக உணர்கிறேன்.. 90% குணமடைந்ததாக விஜய் ஆண்டனி ட்வீட்!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தான் 90 சதவிகிதம் குணமடைந்துள்ளதாகவும் பிச்சைக்காரன் 2 படத்தின் சூட்டிங்கை துவங்கியுள்ளதாகவும் விஜய் ஆண்டனி அப்டேட் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது பல படங்கள் மற்றும் பின்னணி இசையால் ரசிகர்களுக்கு துள்ளலிசை பாடல்களை அதிகளவில் கொடுத்துள்ளார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் தன்னை நடிகராகவும் தயாரிப்பாளராகவும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

பிச்சைக்காரன் படம்
விஜய் ஆண்டனி கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது பிச்சைக்காரன். உடல்நிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய அம்மாவிற்காக பிச்சை எடுக்கும் மகனாக இந்தக் கேரக்டரில் அதிரடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இந்தப் படத்தின் வரவேற்பையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

பிச்சைக்காரன் 2 படம்
இந்த இரண்டாவது பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் மலேசியா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் ஸ்கை ஜெட் ஓட்டும் காட்சியில் அவர் நடித்தபோது அவருக்கு விபத்து ஏற்பட்டது. மிகவும் கடுமையான காயங்களை இந்த விபத்து அவருக்கு ஏற்படுத்தியது.

விபத்தை சந்தித்த விஜய் ஆண்டனி
இதையடுத்து சென்னையில் பிரபல மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு முகத்தில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கைவிரலை மட்டும் உயர்த்திக் காட்டி, தான் நலமாக இருப்பதாகவும் விரைவில் ரசிகர்களுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜய் ஆண்டனி
இந்நிலையில் இன்றைய தினம் தான் 90 சதவிகிதம் குணமடைந்துவிட்டதாகவும், உடைந்த தன்னுடைய தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று கூடிவிட்டதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் முன்பை விட மிகவும் சந்தோஷமாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிச்சைக்காரன் 2 பட சூட்டிங் துவக்கம்
வரும் ஏப்ரல் மாதத்தில் பிச்சைக்காரன் 2 படம் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனால் இன்றைய தினம் படத்தின் சூட்டிங்கை துவங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தன்னுடைய ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பிச்சைக்காரன் படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற நிலையில், தற்போது பிச்சைக்காரன் 2 படமும் அதே அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











