Armstrong Death: எங்களின் அதிகாரத்தை இழந்துவிட்டோம் - உச்சகட்ட வேதனையில் நடிகர் தீனா பேச்சு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் அதாவது ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் இப்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பொதுமக்கள் பலரு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கானா பாலா, இசைவானி, பாடலாசிரியை உமா தேவி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக கடந்த 10 அண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவரை கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி மற்றும் அவரது கூட்டாளிகள் ஜூலை 5ஆம் தேதி கொலை செய்ததாகக் கூறி சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இவரது கொலைக்கு பலவேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, " தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழ்நாடு அரசு இதுவரை உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை. அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளைப் பிடித்திருக்கலாம் எனக் கூறினார்.
நடிகர் தீனா: ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதில் இருந்து அவரது உடலுக்கு அருகே இருந்து வருபவர்களில் நடிகர் தீனாவும் ஒருவர். ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்து வரும்போதுகூட ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யவும் தீனா உதவினார். அதேபோல் உணர்ச்சிவசப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபோதுகூட, காவல்துறையினரிடம் தன் சார்பில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றது.

எங்களது எழுச்சி நாயகன்: ஆம்ஸ்ட்ராங் மறைவால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான நடிகர் தீனா செய்தியாளார்களிடம் பேசுகையில், " எங்களது அதிகாரம் ஆம்ஸ்ட்ராங். எங்களது வாழ்வு ஆம்ஸ்ட்ராங். அவருடைய மறைவால் எங்களுடைய மொத்த அதிகாரமும் போனதைப் போல் உணர்கின்றேன். பூர்வகுடி மக்களின் எழுச்சி நாயகன் எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். இது ஈடு செய்யமுடியாத பெரிய இழப்பு. என்னால் பேசக்கூட முடியவில்லை. எங்கள் அண்ணன் இருந்தவரை கவலையில்லாமல் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இப்போது 100 ஆண்டுகள் பின்னோக்கி போனதைப் போல் உள்ளது. எங்களுகு ஜாதி, மதம், இனம், நாடு என்ற பாகுபாடு கிடையாது. எங்களுக்கு இருப்பது மனிதநேயம். நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள்.

அடையாளமில்லாத மக்கள்: மனிதநேயத்துடன் வாழும் மக்கள் நாங்கள். எங்கள் முன்னால் யார் வந்து நின்றாலும் அவர்களை நாங்கள் மனிதனாகத்தான் பார்ப்போம். பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னதைப்போல் எந்த அடையாளமும் இல்லாமல் வாழக்கூடிய மக்கள் நாங்கள். எங்களைப் பார்ப்பவர்கள்தன் ஜாதியாகப் பார்க்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் வாழ்ந்தவரை ஜாதியாக வாழவில்லை, மதமாக வாழவில்லை, இனமாக வாழவில்லை. இங்கு இருக்ககூடிய அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து வாழ்ந்த தலைவர்தான் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவரை நாங்கள் இழந்திருக்கின்றோம்" என கூறினார்.


Click it and Unblock the Notifications











