Delhi Ganesh :மாறாத கமல்ஹாசன்.. உச்சி குளிர்ந்த டெல்லி கணேஷ்!
சென்னை : நடிகர் டெல்லி கணேஷ் நீண்ட காலங்களாக தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர்.
தன்னுடைய குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் முக்கியமான கேரக்டரில் இவர் நடித்து வருகிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை சிறப்பாக திரையில் கொண்டு வருபவர் டெல்லி கணேஷ்.

கமலை பாராட்டிய டெல்லி கணேஷ் : நடிகர் டெல்லி கணேஷ் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சிறப்பான பல கேரக்டர்களை நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். துவக்கத்தில் நாயகனாகவும் நடித்துள்ள இவர், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் இவர் நடித்திருந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1976ம் ஆண்டில் வெளியான பட்டினப் பிரவேசம் என்ற படத்தில் இவர் அறிமுகமானார். இந்தப் படத்தை கே பாலசந்தர் இயக்கியிருந்தார்.
டெல்லி கணேஷ், கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கேரக்டர் ரோல்களில் மட்டுமில்லாமல் வில்லன் ரோல்களிலும் இவர் மிரட்டியுள்ளார். இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவருடைய சொந்தப் பெயர் கணேசன், இவரது பெயரை சினிமாவிற்கு தக்கபடி மாற்றிக் கொள்ளும்படி கே பாலசந்தர் கொடுத்த அட்வைசையடுத்து டெல்லி கணேஷ் என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டதாக இவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 1985ம் ஆண்டில் வெளியான சிந்து பைரவி படத்தில் குடிப்பழக்கத்திற்கு உள்ளான மிருதங்க கலைஞராக நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டார். தொடர்ந்து கே பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்திலும் இவருக்கு சிறப்பான கேரக்டர் அமைந்தது. 1980களில் ஏராளமான படங்களில் துணை கேரக்டர்களில் நடித்துள்ளார். கே பாலசந்தரின் உதவி இயக்குநராக பணியாற்றிய விசுவின் இயக்கத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பாலக்காட்டு தமிழ் பேசி நகைச்சுவையிலும் பட்டையை கிளப்பினார். கமல் -கிரேசி மோகன் கூட்டணியில் அமைந்த அவ்வை சண்முகி படத்தில் சுயநலம் மிகுந்த கேரக்டரில் இவர் நடித்திருந்த கேரக்டரும் மிகவும் சிறப்பான பெயரை இவருக்கு பெற்றுத் தந்தது. சமீபத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தந்தையாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கியமான ரோலில் இதுவரை தான் நடிக்காத ரோலில் நடித்துள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கமலுடன் தான் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் தற்போது அவர் பெரிய ஆளாக ஆகிவிட்டார், அரசியலிலும் இருப்பதால், அவருடன் பேச தயக்கமாக இருந்ததாகவும் அதனால் ஒதுங்கி ஓரமாக அமர்ந்ததாகவும் டெல்லி கணேஷ் தெரிவித்தார். ஆனால் அவர் பக்கத்தில் வந்து அமர்ந்த கமல்ஹாசன், தன்னை நலம் விசாரித்ததாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து நெகிழ்ந்துப்போன டெல்லி கணேஷ், அவரிடம் சார் நீங்கள் மாறவேயில்லை என்று பாராட்டு தெரிவித்ததாகவும் அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், எல்லாரும் மனிதர்கள்தானே ஏன் மாறவேண்டும் என்று கேட்டதாகவும் டெல்லி கணேஷ் தெரிவித்தார். கமல்ஹாசனுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். அவர் கமலுடன் பேச தயங்கிய சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











