Delhi ganesh: நேற்றிரவு என்ன நடந்தது.. டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்கள்.. மருமகன் சொன்ன தகவல்!
சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் மறைவையொட்டி தமிழ் திரையுலகம் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பலரும் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். டெல்லி கணேஷுடன் சிந்து பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சிவக்குமார் தன்னுடைய மகன் கார்த்தியுடன் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனிடையே, நேற்றிரவு குடும்பத்தினர் அனைவருடனும் கலகலப்பாக பேசி சிரித்துவிட்டு தூங்க சென்ற டெல்லி கணேஷ் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக அவரது மருமகன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். மேலும் டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலம் நாளை நடக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் டெல்லி கணேஷ்: நடிகர் டெல்லி கணேஷ் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களுடன் இணைந்து நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் கமல்ஹாசனுடன் கோலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள் என கமல்ஹாசனின் அதிகமான படங்களில்தான் டெல்லி கணேஷின் அதிகமான திறமை வெளிப்பட்டது. தொடர்ந்து இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்து வந்த டெல்லி கணேஷ், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது: குறும்படங்களிலும் வெப் தொடர்களிலும் டெல்லி கணேஷ் அதிகமாக நடித்துள்ள நிலையில், தற்போது தன்னுடைய 81வது வயதில் அவர் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு காலமாகியுள்ளார். நேற்றைய தினம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த அவர் தூங்க சென்ற நிலையில், தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவருடைய மருமகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கலைமாமணி விருதை பெற்றுள்ள டெல்லி கணேஷ், கடந்த மாதத்தில்கூட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றதை அவர் சோகத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.
பாகுபாடு காட்டாத மனிதர்: இந்த சந்தோஷத்தை வரும் செவ்வாய்க் கிழமை கொண்டாட குடும்பத்தினர் திட்டமிட்டிருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் சினிமா மட்டுமே அவரது கனவாக பேஷனாக இருந்ததாக கூறியுள்ள அவர், இரு தினங்களுக்கு முன்புகூட ஒரு படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாகவும் நாளைய தினம் சூட்டிங்கிற்கு தயாராகி வந்ததாகவும் மேலும் கூறியுள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு இருந்த நிலையில், நேற்றிரவு தூக்கத்திலேயே டெல்லி கணேஷ் உயிர் பிரிந்துள்ளது. அனைவரிடமும் அன்புடன் பழகும் தன்மையுடைய டெல்லி கணேஷ், மகன் -மருமகன் என்ற பாகுபாடை பார்த்ததில்லை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லி கணேஷ் இறுதி சடங்குகள்: சினிமா மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் அவர் வசித்துவரும் ராமாபுரம் கம்யூனிட்டிக்கும் அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் கூறியுள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாக பேசுபவர் என்றும் தெரிவித்துள்ளார். அவரது மறைவு சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் நேசித்த அவரது முதல் மனைவி சினிமா என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லி கணேஷின் இறுதி சடங்குகள் நாளை காலை 9 முதல் 10 மணிவரை நடக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











