HBD Dhanush - தனுஷும் ஐஸ்வர்யாவும் அதில் இணைந்தது இப்படித்தான்... சுவாரஸ்ய சம்பவம் உள்ளே
சென்னை: Happy Birthday Dhanush (பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ்) நடிகர் தனுஷ் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக அடையாளப்பட்டிருக்கிறார் தனுஷ். அவரது வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் அசுரனாக உயர்ந்து நிற்கிறார். அவர் துள்ளுவதோ இளமையில் அறிமுகமானபோது அவரைப் பார்த்து பலரும் உருவ கேலி செய்தார். ஆனால் இப்போது ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது திறமையை போட்டு வளர்ந்திருக்கிறார் தனுஷ்.

செல்வராகவன் உளி: தனுஷுக்குள் ஒரு மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை ஆரம்பகாலகட்டத்தில் வெளிச்சம் போட்டு காட்டிய படங்கள் என்றால் காதல் கொண்டேன், புதுப்பேட்டைதான். இரண்டு படங்களையும் செல்வராகவன் இயக்கியிருந்தார். அந்த இரண்டு படங்களில் தனுஷ் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் அவரது வயதுக்கு மீறியவை. ஆனால் அதை ரொம்பவே அசால்ட்டாக செய்துகாட்டினார் தனுஷ்.
தேசிய விருது: தனுஷின் கரியரில் உச்சம் என்றால் ஆடுகளம் படம். வெற்றிமாறன் இயக்கிய அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அதேபோல் அசுரன் படத்துக்காகவும் தேசிய விருது வென்றிருந்தார். இதற்கிடையே பாலிவுட்டில் தடம் பதித்த தனுஷ் அடுத்ததாக ஹாலிவுட்டுக்கும் சென்று அசத்தினார்.
பன்முக கலைஞர்: நடிகராக மட்டுமின்றி இயக்குநர் டிப்பார்ட்மெண்ட்டிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கிய தனுஷ், அடுத்ததாக தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். அதேபோல் பாடல் பாடுவது, பாடல்கள் எழுதுவது என சினிமாவின் பல ப்ளாட்ஃபார்ம்களில் தனது ஆளுமையை நிரூபித்துவருகிறார்.
ஆயிரத்தில் ஒருவன்: தனுஷ் பாடிய பாடல்களிலேயே ஆயிரத்தில் ஒருவனில் இடம்பெற்ற உன் மேல ஆசைதான் என்ற பாடல். அதனை தனுஷ் மட்டுமின்றி அவரது மனைவி ஐஸ்வர்யாவும் (இருவரும் தற்போது பிரிந்திருந்தாலும் இன்னமும் விவாகரத்து பெறவில்லை) பாடியிருந்தனர். தற்போது இருவரும் எப்படி அந்தப் பாடலுக்குள் வந்தார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்,.

செல்வா கொடுத்த ஐடியா: ஆயிரத்தில் ஒருவனுக்காக ரொம்பவே மெனக்கெட்டு அதிக நேரம் எடுத்துக்கொண்டுதான் ஜிவி பிரகாஷ் ட்யூன்கள் போட்டாராம். ஆனால் உன் மேல ஆசைதான் பாடலை மூன்று மணி நேரத்தில் முடித்துவிட்டாராம். ட்ராக்கை முதலில் செல்வராகவன் பாடியிருக்கிறார். அவரது குரல் நன்றாக இருந்தாலும் ஸ்ருதி தப்பியிருக்கிறது. இதனையடுத்து செல்வாவிடம் ஜிவி பிரகாஷ் உங்கள் குரல் நன்றாக இருக்கிறது ஆனால் ஸ்ருதி சேரவில்லை. எனவே உங்கள் குரல் போன்ற ஒருவரது குரல் இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்.
இதற்கிடையே தனுஷ் தாமாகவே சில பாடல்களை பாடி செல்வராகவன் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே காண்பித்திருக்கிறார். அது உடனடியாக நியாபகத்துக்கு வர தனுஷ் பாடுனா நல்லா இருக்கும் என ஐடியா சொல்லியிருக்கிறார். அதோடு ஐஸ்வர்யாவும் பாடுவார் அவரையும் பாட வைக்கலாம் என சொல்ல உடனடியாக தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் அழைப்பு சென்றிருக்கிறது.
அதனையடுத்து இரண்டு பேரும் வந்து அந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள். தனுஷ் 40 நிமிடங்களிலேயே அந்தப் பாடலை பாடி முடித்திருக்கிறார். இந்தத் தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். தனுஷுக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











