Dhanush: இது ஜெயிலர் வாரம்.. முன்னாள் மாமனார் படம் குறித்து தனுஷ் உற்சாகப்பதிவு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமான டிக்கெட் புக்கிங்கை செய்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் ஜெயிலர் படத்திற்கான வரவேற்பு அதிகமாக காணப்படுகிறது. வெளிநாட்டு ரசிகர்களும் இந்தப் படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது ஜெயிலர் வாரம் என தனுஷ் உற்சாகப்பதிவு: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் வரும் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது ஜெயிலர். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் படத்தை அதிகமாக புக் செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன. படத்தின் இசை வெளியீடு, போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் அடுத்தடுத்த 4 பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெயிலரும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக மாறியுள்ளது.
ரஜினியின் கடந்த சில படங்கள் ரசிகர்களை அதிகமாக கவராத நிலையில், தற்போது ஜெயிலர் படம் சர்வதேச அளவில் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் அமெரிக்க ரசிகர் ஒருவர், தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் சேர்த்து டிக்கெட்டுகளை புக் செய்ததுடன், அந்த டிக்கெட்டுகளை மாலை போல அணிந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
ஜெயிலர் படத்திற்காக சக நடிகர்களும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனும், பிரபல நடிகருமான தனுஷ், இது ஜெயிலர் வாரம் என தன்னுடைய உற்சாகத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்தபோதிலும் அவருடைய தந்தையான ரஜினியின் அடுத்தடுத்த படங்களுக்கு தனுஷ் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடையிலான 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கை கடந்த ஆண்டில் பிரிவு அறிவிப்புடன் நிறைவடைந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் தனுஷுடன் அவர்களை அடிக்கடி பொது வெளிகளில் பார்க்க முடிகிறது. இவர்களின் பிரிவிற்கான உண்மையான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.


Click it and Unblock the Notifications











