என் குடும்பம் இப்படி இருக்க காரணம் யுவன் ஷங்கர் ராஜாதான் - தனுஷ் ஓபன் டாக்
சென்னை: எனது குடும்பம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் யுவன் ஷங்கர் ராஜாதான் என நடிகர் தனுஷ் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். ஆரம்பத்தில் மிக மோசமான உருவ கேலியை சந்தித்தவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவருகிறார். எந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டாலும் நடிப்பில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார் தனுஷ். சமீபத்தில் அவரது நடிப்பில் வாத்தி படம் வெளியானது. அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார்.

தனுஷ் எனும் மகா நடிகனை செதுக்கிய செல்வராகவன்
முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாதான் முதலில் இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே தனது மூத்த மகனான செல்வராகவனின் கைகளில் துள்ளுவதோ இளமையையும், தனுஷையும் ஒப்படைத்தார் அவர். அந்தப் படம் ஓரளவு வெற்றிபெற்றது. அதேசமயம் அடலட் காட்சிகள் அதிகம் இருப்பதகாவ்ம் விமர்சனங்களை சந்தித்தது அந்தப் படம்.

முதல் படம் எடுக்கப்பட்ட கதை
தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா பெயர் பெற்ற இயக்குநராக திகழ்ந்தவர். ஆனால் காலப்போக்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க அவரது குடும்பம் கஷ்டத்தில் விழுந்தது. இதனால் தனது இரண்டு மகன்கள், மகள்கள், மனைவியுடன் சொந்த ஊரான தேனிக்கே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தார் கஸ்தூரி ராஜா. அந்த சமயத்தில்தான் தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்த கஸ்தூரி ராஜா கடன் வாங்கி தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை படத்தை ஆரம்பித்தார்.

படத்துக்கு ஸ்டார் வேல்யூ கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா
துள்ளுவதோ இளமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அவரது இசையில் பாடல்கள் மெகா ஹிட்டாகின. பின்னணி இசையும் தரமாக இருந்தது. சொல்லப்போனால் கஸ்தூரி ராஜாவிடமிருந்து துள்ளுவதோ இளமை படம் செல்வராகவன் கைக்கு வந்தாலும் அப்போது செல்வராகவன் பெரிதாக அடையாளப்படவில்லை. அனைவருமே புதுமுகங்கள் என்பதால் அந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பெயர்தான் ஸ்டார் வேல்யூவை கொடுத்தது.

துள்ளுவதோ இளமை வெற்றிக்கு யுவன்தான் காரணம்
இந்நிலையில் துள்ளுவதோ இளமை படம் வெற்றி பெற்றதற்கு யுவன் ஷங்கர் ராஜாதான் காரணம் என தனுஷ் பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது. மேடை ஒன்றில் பேசிய தனுஷ், "துள்ளுவதோ இளமை படத்தில் எல்லோரும் புதுமுகங்கள். அதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பும் இல்லை.
அப்போது யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும்தான் படத்தின் வெற்றிக்கு உதவின. அந்தப் படம் ஒருவேளை தோல்வியடைந்திருந்தால் நாங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கே சென்றிருப்போம். அப்படி நாங்கள் செல்லாம் இப்படி எங்கள் குடும்பம் இருப்பதற்கு யுவன் ஷங்கர் ராஜாதான் காரணம்" என பேசியிருந்தார். அப்படி அவர் பேசிய வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











