ரிலீசாகும் முன்பே குவியும் பாராட்டு.. வாழை அழகான படைப்பு.. புகழ்ந்த தனுஷ்!
சென்னை: வாழை திரைப்படத்தின் ஸ்பெஷல் திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், தமிழ் திரையுலகின் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தை பார்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள் என வாழை படத்தை பாராட்டி உள்ளார்.
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். மேலும், கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வாழை திரைப்படம்: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. இப்படம் ஆகஸ்ட் 23ந் தேதியான நாளை தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஸ்பெஷல் காட்சியை முக்கிய பிரபலங்களுக்கு போட்டு காட்டப்பட்ட நிலையில் படத்தை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
கண்கலங்கிய பாலா: படம் பார்த்த, இயக்குநர் மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்டோர், வாழை திரைப்படம் மாரி செல்வராஜுக்கு நிச்சயம் பல விருதுகளை பெற்றுத்தரும் என்று பேசிவரும் நிலையில், படத்தை பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து, சில நிமிடங்கள் மாரியின் கைகளை பற்றியபடி பேச முடியாத நிலையில் அமர்ந்திருந்தார். அதே போல, நடிகர் சூரியும் மாரிசெல்வராஜை கட்டி அனைத்து பாராட்டினார்.
அழகான படைப்பு: இந்நிலையில், நடிகர் தனுஷ், வாழை படத்தை பற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள். உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் அழகான படைப்பு வாழை. இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என நடிகர் தனுஷ் அதில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











