ஸ்லோ பாய்சன் வைத்த சகோதரர்.. பெரிய உதவி செய்த தனுஷ் - மனம் திறந்த பொன்னம்பலம்
சென்னை: நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவில் இருக்கும்போது நடிகர் தனுஷ் செய்த உதவி பலரது பாராட்டை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் வில்லனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பொன்னம்பலம். ஆஜானுபாகுவான உடலும், வித்தியாசமான முக பாவனையும் என ஒரு காலத்தில் திரையுலகை கலக்கியவர் பொன்னம்பலம். இப்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள் மூலம் எண்ட்ரி கொடுத்த பொன்னம்பலம்
ஃபைட்டராக இருந்த பொன்னம்பலம் கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார்.அதன் பிறகு வெற்றிவிழா, மைக்கேல் மதன காம ராஜன், நாட்டாமை, பெரிய மருது, மாநகர காவல் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். குறிப்பாக நாட்டாமை படத்தில் அவரது நடிப்பு இன்றுவரை மீம் மெட்டீரியலாக இருப்பது கவனிக்கத்தக்கது. மேலும், அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் பொன்னம்பலம்

பிக்பாஸ் வீட்டில் பொன்னம்பலம்
முன்னணி நடிகராக வலம் வந்த பொன்னம்பலத்துக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இதனையடுத்து கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட சீசனில் சிறப்பாகவே விளையாடினார். இருந்தாலும் அவரால் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியவில்லை. எனினும், பிக்பாஸ் மூலம் மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வரலாம் என அவர் கணக்கு போட்டிருந்தார். ஆனால் அதுவும் பலிக்கவில்லை.

பொன்னம்பலத்துக்கு வந்த உடல்நலக்குறைவு
சூழல் இப்படி இருக்க பொன்னம்பலத்துக்கு சிறுநீரகத்தில் பிரச்னை வந்தது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து உடல்நலம் தேறியது.தான் உடல்நலக்குறைவில் இருந்தபோது தனக்கு தனுஷும், சிரஞ்சீவியும் அதிக அளவு உதவியதாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் பொன்னம்பலம்,

தனுஷ் செய்த பெரிய உதவி
இதுகுறித்து பேசிய அவர், "தனுஷுக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். நான் அவருடன் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும்போதே எனது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைத்தார். அது நான் கேட்டதைவிட பத்து மடங்கு அதிகம் இருந்தது. இப்படி அவர் உதவுவார் என நான் நினைக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக நான் கஷ்டப்படாத அளவுக்கு தனுஷ் உதவி செய்திருக்கிறார்.

பொன்னம்பலத்துக்கு சிரஞ்சீவி செய்த உதவி
அதேபோல் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நம்பர் கிடைத்தது. அவருக்கு உதவி கேட்டு மெசேஜ் செய்தேன். பத்து நிமிடங்கள் கழித்து அவரே ஃபோன் செய்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், ஹைதராபாத் வந்து சிகிச்சை பெற முடியுமா என்று கேட்டார். ஆனால் எனது உடல் இருக்கும் நிலையில் அவ்வளவு தூரம் வரமுடியாது என்றேன். இதையடுத்து சென்னையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

ஒரு பைசா வாங்காமல் அளிக்கப்பட்ட சிகிச்சை
அங்கு சென்றபோது என்னிடம் ஒரு பைசாக்கூட வாங்காமல் சிகிச்சை அளித்தனர். மொத்த செலவையும் சிரஞ்சீவியே ஏற்றுக்கொண்டார். அவர் எனக்கு அண்ணன் போன்றவர். ராம் சரணின் மனைவி உபாசனாவுக்கு சொந்தமானது அப்பல்லோ. அங்கு என்னை சிறப்பாக கவனித்துக்கொண்டனர். நான் போதை பொருள் பயன்படுத்தியதால் எனக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதாக பலரும் நினைத்தார்கள். ஆனா அது உண்மை இல்லை. எனது தந்தையின் மூன்றாவது மனைவியின் மகன் எனது உணவில் ஸ்லோ பாய்சன் கலந்துகொடுத்துவிட்டார். அதனால்தான் எனது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. நான் நன்றாக சம்பாதித்ததை பார்த்து பொறாமைப்பட்ட அவர் இப்படி செய்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











