ஒருத்தனையும் விடாத அடிச்சி துரத்து கர்ணா.. எப்படி இருக்கு தனுஷின் கர்ணன் டீசர்?
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படம் மற்றும் அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் அசுர நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும் படம் என பெருமளவில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் உள்ளன.
தற்போது வெளியாகி உள்ள கர்ணன் டீசர் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இருந்ததா? என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

கர்ணன் டீசர்
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் டீசரை வெளியிட்டுள்ளார். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ், லால், ரஜிஷா விஜயன், கெளரி கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் கர்ணன் திரைப்படம் உருவாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி கர்ணன் திரைக்கு வருகிறது.

பெரிய எதிர்பார்ப்பு
இயக்குநர் வெற்றிமாறனின் அசுரன் படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ள நிலையில், கர்ணன் படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், கர்ணன் படத்தையும் தரமாக இயக்கி இருப்பார் என்றும் திரைக்கதையில் ஆழம் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டீசர் எப்படி இருக்கு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள கர்ணன் டீசரில் பருந்து ஒன்று கோழிக் குஞ்சை கொத்தித் தூக்கிச் செல்லும் காட்சியை சாதிய பிரச்சனையின் உருவகமாக வைத்து ஆரம்பத்திலேயே தான் இந்த கருத்தை தான் படமாக எடுத்துள்ளேன் என்பதை விளக்குகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

வாளும் குதிரையும்
கையில் வாள் ஏந்தி குதிரை மீது ஏறி போர் வீரன் கணக்காக ஒரு ஊருக்கு நடிகர் தனுஷ் வருகிறார். அந்த கிராமத்தில் நிலவும் ஒரு பெரிய பிரச்சனைக்கு எதிராக அவர் போராட உள்ளார் என தெரிகிறது. ஆனால், அது கர்ணனின் சொந்த ஊர் தானா? அந்த சொந்த ஊருக்கு என்ன பிரச்சனை, பாறை மீது குத்தப்பட்டிருந்த வாள் யாருடையது? உடைந்த புத்தர் சிலையை காட்டுவதன் நோக்கம் என்ன? என ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்களுக்கு முன்பாக டீசரில் விரித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

ஒருத்தனையும் விடாத
குதிரை மீது ஏறி வரும் கர்ணனை எதிர்பார்த்து ஒரு கிராமமே காத்திருப்பது போலவும், ஒருத்தனையும் விடாத அடிச்சு துரத்து கர்ணா என பாட்டி ஒருவர் பேசும் வசனத்தையும் இந்த டீசரில் பார்க்க முடிகிறது. மேலும், மரப்பாச்சி பொம்மைகள் டீசர் முழுக்க என்ன காரணத்திற்காக காட்டப்படுகின்றன என்பதும் புரியவில்லை. ஆனால், அடிதட்டு மக்களின் வலிகளை மட்டும் ஒவ்வொரு ஃபிரேம்களிலும் இயக்குநர் மாரி செல்வராஜ் கடத்தி செல்கிறார்.

ரசிகர்கள் ஏமாற்றம்
அசுரன் படத்தின் டீசர் மற்றும் ஜகமே தந்திரம் டீசர் இருந்த அளவுக்கு கர்ணன் டீசர் இல்லை என்பது பெருவாரியான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மேலும், நடிகர் தனுஷ் ஏதாவது வசனம் பேசி இருந்தால், இன்னமும் அவரது ரசிகர்களுக்கு இந்த டீசரை பிடித்திருக்கும் என்றும் கருத்துக்கள் பரவி வருகிறது. பேசாமலே செயலில் சம்பவம் செய்வார் என்றும் தனுஷின் தீவிர ரசிகர்கள் கர்ணன் மீது ஒட்டுமொத்த நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

இன்னொரு விருது பார்சல்
மேலும், இன்னொரு தேசிய விருதை பார்சல் பண்ணி எடுத்து வைங்க கர்ணன் வருகிறான் என்றும் தனுஷ் ரசிகர்கள் #KarnanTeaser ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் தனுஷை ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த ட்வீட்டுக்கு கீழும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications