ஒரே தியேட்டரில் படம் பார்க்க வந்த ரஜினி ஃபேமிலி.. அட தனுஷும் இருக்காரே!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படம் முன்னதாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இன்றைய தினம் சிறப்பு காட்சியுடன் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ரிலீசாகியுள்ளது.
இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு நல்ல ரிவ்யூக்களும் சிறப்பான வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக சென்று படம் பார்த்தனர். மேலும் டிஜே ஞானவேல், அபிராமி உள்ளிட்டவர்களும் இவர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பு மற்றும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மஞ்சுவாரியர், அமிதாப்பச்சன், பகத் பாசில், அபிராமி துஷாரா விஜயன், ராணா, கிஷோர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக படத்தின் துவக்கத்திலேயே இடம் பெற்றுள்ள மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வேட்டையன் படம்: முன்னதாக லிரிக் வீடியோவாக வெளியான இந்தப் பாடல் கோடிக்கணக்கான வியூஸ்களை யூடியூபில் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல பாதிப்பு காரணமாக பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் உருவாகி வரும் கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணையுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் அனைவரும் கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் ஒட்டுமொத்தமாக இன்றைய தினம் வேட்டையன் படத்தை பார்த்துள்ளனர்.
ரஜினி குடும்பத்துடன் படம் பார்த்த தனுஷ்: ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோரும் படத்தை திரையரங்கில் சென்று பார்த்துள்ளனர். அனிருத் மற்றும் அவரது பெற்றோர், நடிகை அபிராமி, படத்தின் இயக்குநர் டிஜே ஞானவேல் உள்ளிட்டவர்களும் இதே திரையரங்கில் படம் பார்த்த நிலையில் முன்னதாக நடிகர் தனுஷும் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் படத்தை பார்த்துள்ளார். நடிகை லதா ரஜினிகாந்த், அனிருத் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிலையில் நடிகர் தனுஷ், அவர்களின் கேள்விகளை தவிர்த்து விட்டு விறுவிறுப்பாக திரையரங்கிற்கு சென்றதை பார்க்க முடிந்தது.
மீண்டும் இணையும் தனுஷ் -ஐஸ்வர்யா ரஜினி?: முன்னதாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த விசாரணையின் போது இவர்கள் இருவருமே நேரில் ஆஜராகவில்லை. இதனால் இவர்கள் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் குடும்பத்தினர் படம் பார்த்த அதே திரையரங்கில் தனுஷும் படம் பார்க்க சென்றுள்ளார். இதனால் அவர்கள் மீண்டும் இணைவது உறுதிபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
லதா ரஜினிகாந்த் போட்ட கண்டிஷன்: முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் உடல்நல பாதிப்பு காரணமாக அவருக்கு மன நிம்மதியும் ஓய்வும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், அவரது உடல் நலன் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுசுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் கூறியதாகவும் அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











