ரத்தப் புற்றுநோய்.. சிகிச்சைப் பெற்று வந்த அறிமுக ஹீரோ.. பட ரிலீசுக்கு முன்பே உயிரிழந்த பரிதாபம்!
சென்னை: புதுமுக நடிகர் ஒருவர், புற்றுநோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையினர் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும் மற்ற பிரச்சனையாலும் உயிரிழந்திருக்கின்றனர்.

சாக்ஷினி புரொடக்சன்
இந்நிலையில், ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஒருவர், புற்றுநோய் காரணமாக, மரணமடைந்து இருக்கிறார். திருப்பூர் சிவகுமார் சாக்ஷினி புரொடக்சன் சார்பில் உருவாகி வந்த படம், திருமாயி. சாலோமோன் கண்ணன் இயக்கி வந்த இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

நாயகன் தேனி பாலா
இதில் நாயகனாக, தேனி பாலா என்பவர் நடித்து வந்தார். இவர் தேனி அருகே உள்ள சீவலம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ராம்சந்த். சினிமாவுக்காக தேனி பாலா என்று மாற்றிக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனர் கலைப்புலி சேகரனிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

ரத்தப் புற்றுநோய்
பிறகு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். இப்போது திருமாயி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி
இதையடுத்தும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 14 ஆம் தேதி பொங்கல் அன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 46. பின்னர் அவர் உடல், சொந்த ஊரான சீவலம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

திரையுலகினர் இரங்கல்
மறைந்த நடிகர் தேனி பாலாவுக்கு செல்வி என்ற மனைவியும் பரிமளா தேவி என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். நடிகர் தேனி பாலா மறைவை அடுத்து 'திருமாயி' படக்குழுவினர் உட்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











