ஓடும் காரில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. அசுரன் பட நடிகையிடம் மூன்றரை மணி நேரம் விசாரணை!
திருவனந்தபுரம்: பிரபல நடிகையை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு கேரளாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் விடப்பட்ட நிலையில், அவர் ஆஜர் ஆகவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 22ம் தேதி தனியார் ஹோட்டலில் நடிகர் திலீப்பின் முதல் மனைவியான மஞ்சு வாரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

நடிகை பலாத்கார வழக்கு
பிரபல கேரள நடிகை கடந்த 2017ம் ஆண்டு கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. கேரள போலீசார் தீவிரமாக இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

கொலை மிரட்டல்
ஜாமீனில் வெளிவந்த நடிகர் திலீப், ஆதாரங்களை அழித்ததாகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. மேலும், அவரது செல்போனில் இருந்து டெலிட் செய்யப்பட்ட 2 லட்சம் போட்டோக்கள், 11 ஆயிரம் வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார்கள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு வராத 2வது மனைவி
இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பதாக கசிந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவரை விசாரிக்க போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் அவர் தட்டிக் கழித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

அசுரன் பட நடிகையிடம் விசாரணை
நடிகர் திலீப்பை விவாகரத்து செய்து பிரிந்த அவரது முதல் மனைவியான அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரிடம் ஏப்ரல் 22ம் தேதி மாலை தனியார் ஹோட்டல் ஒன்றில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். சமீபத்தில் மீட்கப்பட்ட டேட்டாக்களில் திலீப் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மூன்றரை மணி நேரம் விசாரணை
சுமார் மூன்றரை மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் பல திடுக்கிடும் வாக்கு மூலங்களை நடிகை மஞ்சு வாரியர் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேரள நடிகர்கள் பலரும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்குத் தான் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











