வேண்டாம்.. இனிமேல் அதை செய்யாதீங்க... கார்த்திக் குறித்து பேசியவர்களை நோக்கி கௌதம் கார்த்திக் பளீச்!
சென்னை: 90களில் கலக்கிய நடிகர் கார்த்திக் குறித்து இயக்குநர் பாரதி கண்ணன் சமீபத்திய பேட்டியில் பேசியது, சமூக வலைத்தளங்களில் பரவலாக கவனத்தை ஈர்த்தது. கார்த்திக் போல மிமிக்ரி செய்து, ஒரு படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு, பணத்தைத் திருப்பித் தர மறுத்துவிட்டதாக பாரதி கண்ணன் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் தான் லேசாக மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்து, கார்த்திக் குறித்து தான் சொன்ன கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், தன் தந்தை குறித்த இத்தகைய விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவது குறித்து நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான முத்துராமனின் மகனாக சினிமாவுக்கு வந்த கார்த்திக், தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். குறிப்பாக 80கள் மற்றும் 90களில், அவரது குறும்புத்தனமான ஸ்டைலுக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் திறைத்துறையில் அவர் குறித்து பல சர்ச்சைகள் இருந்தது.
படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை, கால்ஷீட் கொடுத்த நாட்களில் படப்பிடிப்புக்கு வருவதில்லை போன்ற விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டன. எனினும், ஒரு சிலர் கார்த்திக்கை பற்றி பெருமையாகவும் பேசியுள்ளனர். மேலும் இயக்குநர் சுந்தர் சி பேட்டி ஒன்றில், கார்த்திக் காலை 7, 8 மணிக்கு ஷூட்டிங்கிற்கு வர மாட்டார் என்று தெரியும். அப்படி இருக்கும்போது அவருக்கு ஷூட்டிங்கை 11, 12 மணிக்கு வையுங்கள், இது மட்டும் இல்லாமல், சென்னையில் இருந்தால் தானே இந்த நெருக்கடி, வெளியூருக்கு கூட்டிச் சென்று, மூன்று மாதங்களுக்கு அங்கேயே தங்க வைத்துவிடுங்கள் என்று தெரிவித்தார்.

பாரதி கண்ணன்: ஆனால், சில வாரங்களுக்கு முன் இயக்குநர் பாரதி கண்ணன் கார்த்திக் பற்றிப் பேசிய வீடியோவில், "நான் இயக்குநராக இருந்தபோது கார்த்திக்கிடம் ஒரு படத்திற்கு கதை சொல்லி 5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, அவர் மேலும் 5 லட்சம் கேட்டார். கொடுத்துவிட்டோம். அதன்பின்னர், தயாரிப்பாளர் கார்த்திக் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்று கூறி, பணத்தைத் திரும்பப் பெறுமாறு கூறினார். நான் பணத்தைத் திரும்பக் கேட்கச் சென்றபோது, கார்த்திக்கிடம் பணம் போனால் திரும்ப வராது என்று உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார்" என பாரதி கண்ணன் கார்த்திக் போலவே மிமிக்ரி செய்து பேசியிருந்தார்.
கௌதம் கார்த்திக்: பாரதி கண்ணனின் இந்த கருத்தைத் தொடர்ந்து, ஒரு சில பிரபலங்களும் கார்த்திக் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர். இதுகுறித்து தனது வேதனையை வெளிப்படுத்திய கௌதம், "என் தந்தை கார்த்திக் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வரும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அது என்னை காயப்படுத்துகிறது. அதைக் கேட்பதற்கே வருத்தமாக உள்ளது."
வருத்தம்: வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தான் அவரவர் வலி தெரியும். நம்முடைய பிரச்சனை தான் பெரியது என்று சொல்ல முடியாது. எனது வேண்டுகோள் என்னவென்றால், இப்போ அப்பா பற்றிப் பேசுபவர்கள் எல்லோருமே சீனியர்கள். நாங்கள் அவர்களைப் பார்த்து தான் வளர்கிறோம். என் அப்பா தலைமுறையில் இருந்தவர்கள், ஒருவருக்கொருவர் அதிக நெருக்கத்துடன் இருந்திருப்பார்கள். இந்த தலைமுறையாவது அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் அப்படி இல்லை. அண்ணன் தம்பிகளாக, தாய் தந்தையாக பழகினார்கள். அப்படி இருக்கும்போது, இந்தப் பிரச்சனையை நேருக்கு நேராக பேசியிருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்போது பொதுத்தளத்தில் பேசியிருக்க வேண்டாம். பொதுத்தளத்தில் பேசுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன" என்று கௌதம் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











