Shakila: ஷகிலா தோள்மீது கைபோட்டு பேசிய நடிகர்.. ஷகிலா கொடுத்த ரியாக்ஷன்.. மேடையில் நடந்த சம்பவம்!
சென்னை: நடிகர் ஷகிலா தமிழ் சினிமாவில் இருக்கும் மிகவும் தைரியமான நடிகை. தனது பதின் பருவத்தில் இருந்து சினிமாவில் நடிக்கும் ஷகிலா, குடும்ப வறுமையின் காரணமாக நடிப்பில் கவனம் செலுத்தினார். ஒரு கட்டத்திற்கு மேல் ஷகிலா என்றாலே கவர்ச்சி நடிகைதான் என முத்திரை குத்தப்பட்டு விட்டது. இன்றைக்கும் அவர் மீதான பார்வை மாறவில்லை. இப்படியான நிலையில் ஷகிலாவின் தோள் மீது கை போட்டு அவரை பாராட்டி பேசியுள்ளார் ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி வெற்றிப் படமாக மாறிய படம் திரு. மாணிக்கம். குடும்ப கதையை கதைக்களமாக எடுத்து அதில் வெற்றி பெற்று காட்டுவது என்பது சமுத்திரக்கனிக்கு கை வந்த கலை. இந்தப் படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடிதம் எழுதி இருந்தார். சூப்பர் ஸ்டார் பாராட்டிய பின்னர் படம் பலரது கவனத்தை பெற்றது. இப்படியான நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக மூத்த இயக்குநர் பாரதிராஜா குறித்து பேசும்போது பலரும் வாயடைத்துப் போனார்கள்.

கௌரவமான தோழி: முதலில் மேடைக்கு வந்ததும், மேடையில் இருந்த நடிகை ஷகிலாவை கையைப் பிடித்து இழுத்து, தனது அருகில் நிறுத்தி, அவர் தோள் மீது கை போட்டு பேசினார். அப்போது அவர், " சினிமாவில் பலபேர் நீண்ட காலம் இருக்க காரணம் சுய அறம். அதுபோல சுய அறத்துடன் இருப்பவர் ஷகிலா. என்னுடைய கௌரவமான தோழி ஷகிலா, வாழ்க்கையில் நான் பெண்கள் குறித்து புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருந்தது, ஷகிலாவுடன் எனக்கு இருந்த நட்பு. அதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு ரொம்பவும் பெருமை.
கவர்ச்சி நடிகை: ஷகிலா, சினிமாவில் கவர்ச்சி நடிகை, இப்படி நடிகை, அப்படி நடிகை என எதைக் கேள்வியாகக் கேட்டாலும் கோபப்படாமல் பதில் சொல்லும் உனது பக்குவத்தைப் பார்த்து நான் பயந்துட்டேன் அம்மா. என்னால் அப்படி இருக்க முடியாது. ஹைதராபாத் ரமோஜியில் நான் ஒரு படத்தில் நடித்தால், இவர் ஒரு படத்தில் நடிப்பார். இருவரும் ஒன்றாகவே ஹைதராபாத் போவோம், ஒன்றாக சென்னைக்கு வருவோம். ஹைதராபாத்தில் இருந்து நான் சென்னைக்கு வருவதே தெரியாது. ஷகிலா அவ்வளவு பேசுவார்.

ஷகிலா ரியாக்ஷன்: ஒரு பெண் உண்மையை பேச ஆரம்பித்த பின்னர், நான் என் அம்மாவைப் பற்றி, மனைவியைப் பற்றி, மகளைப் பற்றி புரிந்து கொள்ள ஷகிலாவுடனான உரையாடல் எனக்கு உதவியது. தன்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் சரி, அது குறித்து எந்த அக்கறையும் கொள்ளாமல் தைரியாமாக பேசுவது என்பதை என்னால் விளக்க முடியவில்லை. எனக்கு அப்படியான தோழிதான் ஷகிலா" என பேசினார். இளவரசு பேசும்போது அருகில் நின்ற ஷகிலா எதுவும் குறுக்கிட்டு பேசாமல் நெகிழ்ச்சியில் அமைதியாக நின்று கொண்டு இருந்தார். இளவரசுவின் பேச்சைக் கேட்ட அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











