மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் திடீர் பலி.. சினிமாவில் தொடரும் சோகம்!
மும்பை: மூச்சுத்திணறல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் திடீரென மரணமடைந்தார்.
இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் சினிமா பிரபலங்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல இந்தி நடிகர் இர்பான் கான், கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் திடீரென்று காலமானர்.

தூக்குப் போட்டு
அவர் மரணமடைந்த அடுத்த நாளே நடிகர் ரிஷி கபூர் மறைந்தார். இவர்களது மரணங்கள் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அடுத்து சில சின்னத்திரை நடிகர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். டிவி நடிகர் மன்மீத் கிரேவல், பொருளாதாரப் பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல டிவி நடிகை ஒருவரும் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சிரஞ்சீவி சார்ஜா
கடந்த சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் அனில் சுரி மரணமடைந்தார். இசை அமைப்பாளர் வஜத் கான், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கன்னடம் மற்றும் மலையாள சினிமாவிலும் திடீர் மரணங்கள் நடந்தன. கன்னட ஹீரோ சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இது கன்னட சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜகதேஷ் முகாதி
இந்நிலையில் இந்தி நடிகர் ஜகதேஷ் முகாதி (Jagesh Mukati) உடல் நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்துள்ளார். இவர், பரினீதி சோப்ரா, சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ள ஹஸி தோ பஸி உட்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். அமிதா கா அமித் உட்பட பல புகழ்பெற்ற டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

மூச்சுத்திணறல்
இந்தி மற்றும் குஜராத்தி தொடர்களிலும் நடித்துள்ள இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு சுவாசப்பிரச்னை இருந்தது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி
பின்னர் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவர் உடல்நிலை மோசமானது. இந்நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு மும்பையில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகினரும் சின்னத்திரையை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











