Nayanthara's 75th movie :நயன்தாரா 75 வது படத்தில் இணைந்த ஜெய்.. பிறந்தநாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை : நடிகை நயன்தாராவின் 75வது படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டு தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிகர் ஜெய் இணைந்துள்ளார்.
முன்னதாக இந்த ஜோடி அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது.

நடிகை நயன்தாரா : நடிகை நயன்தாரா ஐயா படத்தில்தான் தன்னுடைய என்ட்ரியை தமிழில் கொடுத்தார். சிறிய பெண்ணாக இந்தப் படத்தில் தன்னுடைய அப்பாவித்தனம் மற்றும் சுட்டித்தனத்தால் ரசிகர்களை கவர்ந்த அவர், தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா, தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதுடன் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.
நானும் ரவுடிதான் என்ற படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்து நடித்திருந்தார் நயன்தாரா. இந்தப் படத்தில் ஏற்பட்ட பழக்கம் இருவருக்கும் காதலை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து 7 ஆண்டுகள் காதலித்த இவர்கள், கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இந்திய அளவில் ரஜினிகாந்த், ஷாருக்கான் என முன்னணி நடிகர்கள் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தொடர்ந்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இருவரும் அதுகுறித்தெல்லாம் கவனம் செலுத்தாமல், தங்களது வாழ்க்கையை சிறப்பாக தொடர்ந்து வருகின்றனர். அவ்வப்போது தங்களது குழந்தைகளுடன் இவர்களை பொது இடங்களில் பார்க்க முடிகிறது. இதுமட்டுமில்லாமல் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை நேரடியாக முகத்தை காட்டாமல் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் தங்களது குழந்தைகளின் முழுப் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். நேற்றைய தினம் குலதெய்வக் கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் நயன்தாராவின் 75வது படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாராவிற்கு ஜெய் ஜோடியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெய்யின் பிறந்தநாளையொட்டி, நயன்தாராவுடனான அவரது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் #HappyBirthdayJai என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக இந்த ஜோடி அட்லியின் ராஜா ராணி படத்தில் இணைந்து நடித்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். விரைவில் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











