பிரபல நடிகர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு.. கொலையா, தற்கொலையா? போலீஸ் விசாரணை!
கொச்சி: பிரபல மலையாள நடிகர் உடல், கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல மலையாள நடிகர், ஜனார்த்தனன் மூழிக்கரா. இவர் நாடகங்களிலும் நடித்து வந்தார்.
மலையாளத்தில் வெளியான இங்கிலீஷ் மீடியம், காக்ஷி அம்மினி பில்லா, மழமேகப் பிறவுகள், ரமணம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

வீட்டில் காணவில்லை
'முத்தப்பன்' என்ற மலையாள டிவி சீரியலிலும் நடித்துள்ளார். இதில் அவர் கேரக்டர் பேசப்பட்டது. சுமார் 52 மேடை நாடகங்களில் நடித்துள்ள இவர், தலச்சேரியில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரை வீட்டில் காணவில்லை. வீட்டின் வெளியே மூடப்பட்டு இருந்த கிணற்றின் வலை திறந்திருந்தது.

தீயணைப்பு துறை
இதனால், அவர் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது அங்கு ஜனார்த்தனன் மூழிக்கரா இறந்து கிடந்தது தெரியவந்தது.

தலசேரி போலீசார்
அவர்கள், அவர் உடலை மீட்டு கொண்டு வந்தனர். தலச்சேரி பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி தலசேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். மறைந்த நடிகர் ஜனார்த்தனனுக்கு, வயது 60.

நடிகர், நடிகைகள்
அவருடைய இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் சில நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். பல நடிகர், நடிகைகள் அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த ஜனார்த்தனன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு மூன்று சகோதர்கள். இதில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











