Captain Vijayakanth: பள்ளி பாடப்புத்தகத்தில் விஜயகாந்த் குறித்த பாடம் வேண்டும்.. ஜெயம் ரவி கோரிக்கை!
சென்னை: நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவையொட்டி எராளமான நடிகர்கள், நடிகைகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று மாலை விஜயகாந்தின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதிலும் எராளமான நடிகர்கள், நடிகைகள் கலந்துக் கொண்டு, தங்களது அஞ்சலியை விஜயகாந்தின் படத்திற்கு செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி ஏற்றியும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விஜயகாந்த் குறித்து நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், விஷால், சிவக்குமார், சந்திரசேகர், எம்எஸ் பாஸ்கர், சச்சு, வடிவுக்கரசி, தேவயானி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அமைத்து அதற்கு விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிகழ்ச்சியில் பங்கேற்கு விஜயகாந்திற்கு மரியாதை செலுத்திய நடிகர் ஜெயம் ரவியும் விஜயகாந்த் குறித்து பேச முடியாமல் திணறினார். அவரது பேச்சு மிகவும் உருக்கமாக அமைந்தது.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 28ம் தேதி தன்னுடைய 71வது வயதில் அவர் காலமானார். அவரது மறைவு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் கலங்கடித்தது. லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர். நடிகர்கள், நடிகைகளும் பங்கேற்றனர். அதில் பங்கேற்க முடியாதவர்கள், அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தியதை பார்க்க முடிந்தது.
நினைவேந்தல் நிகழ்ச்சி: இந்நிலையில் இன்றைய தினம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசன், விஷால், விக்ரம், ஜெயம்ரவி, சதீஷ், கருணாகரன், மன்சூர் அலிகான், எம்எஸ் பாஸ்கர், சந்திரசேகர் உள்ளிட்ட நடிகர்களும் சச்சு, அம்பிகா, தேவயானி, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகைகளும் பங்கேற்று விஜயகாந்தின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது நினைவுகளையும் சிறப்புகளையும் பகிர்ந்துக் கொண்டனர். மிகவும் நெகிழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. விஜயகாந்தின் பண்புகளை அதிகமாக ரசிகர்கள் அறிந்திருந்த போதிலும் அவரின் பல விஷயங்களை இந்த நிகழ்ச்சி மூலம் அறிந்துக் கொள்ள முடிந்தது.
வாழும்போதே கடவுள் ஆனவர் விஜயகாந்த்: நிகழ்ச்சியில் பலரும் விஜயகாந்த் குறித்து பல விஷயங்களை பகிர்ந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம்ரவி, எல்லாரும் இறந்தால்தான் கடவுள் ஆவார்கள். சிலர்தான் வாழும்போதே கடவுள் ஆவார்கள், அதுபோன்றவர்தான் கேப்டன் விஜயகாந்த் என்று தெரிவித்தார். அவர்குறித்த பல அனுபவங்கள் தனக்கு இருந்தாலும் அதை ஷேர் செய்யக்கூட தோன்றவில்லை என்றும் தானே தன்னுடைய இதயத்தில் வைத்துக் கொள்வதாகவும் ஜெயம்ரவி குறிப்பிட்டார். ஆனால் அவர் நமக்காக அதிகமான விஷயங்களை ஷேர் செய்துள்ளதாகவும் அதிகமாக நமக்காக விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் ஜெயம்ரவி பாராட்டு தெரிவித்தார்.
பள்ளி பாடப் புத்தகத்தில் விஜயகாந்த்: பள்ளி பாடப்புத்தகங்களில் கேப்டனின் வாழ்க்கை குறித்து வர வேண்டும் என்பதே தன்னுடைய கோரிக்கை என்றும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டார். ஒரு நடிகராக, அரசியல்வாதியாக அவரின் வாழ்க்கை பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று தான் கேட்கவில்லை என்றும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவரை குறிப்பிட வேண்டும் என்றும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டார். மற்றபடி அவர்குறித்து பேச வார்த்தைகள் வரவில்லை என்று குறிப்பிட்ட ஜெயம்ரவி, விஜயகாந்த் வார்த்தைகளையே தானும் குறிப்பிட விரும்புவதாக, சத்ரியனுக்கு சாவில்லை என்றுகூறி தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











