நான் இறந்துவிட்டதாக எனக்கே மெஸ்ஸேஜ் வருகிறது: நடிகர் ஜெயராம்
ஜீப் விபத்தில் சிக்கவில்லை என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்
கொச்சி: நடிகர் ஜெயராம் ஜீப் விபத்துக்குள்ளாகும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இயற்கையின் முன்னால் எல்லோரும் சமம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் கேரள வெள்ளம். வெள்ளப் பாதிப்பு ஏழை பணக்காரன் ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் ஏற்பட்டது. அதில் திரைத்துறையினரும் பாதிக்கப்பட்டனர்.

நடிகர் ஜெயராமின் குடும்பம் ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. தற்போது எஸ்டேட் தொழிலாளர்களுடன் ஜெயராம் ஜீப் விபத்துக்குள்ளாகும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சிவப்பு நிற லேண்ட் க்ரூசர் ஜீப்பை பள்ளத்திலிருந்து வேகமாக மேலே ஏற்ற முயற்சிக்கிறார் ஜெயராம். வேகமாக மேலே ஏறிவரும் ஜீப் ஒரு கட்டத்தில் ஏறமுடியாமல் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்று மரத்தில் மோதுகிறது. அதில் ஜீப்பின் பின்னால் இருந்த பெட்டிகள் தூக்கி வீசப்படுகின்றன.
இந்த விபத்தில் ஜெயராம் உள்பட ஜீப்பில் பயணித்தவர்கள் படுகாயமடைந்ததாகக் கூறி வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஜெயராம், அந்த ஜீப்பை அவர் இயக்கவில்லை என்றும், அது ஒரு மாதத்திற்கு முன்பு தாய்லாந்தில் நடந்த விபத்து என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இறந்துவிட்டதாக அவருக்கே தகவல் வருவதாகவும், நான் நலமுடன் இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











