சினிமாவில் மோசமான சாதிப்பாகுபாடு... பா. ரஞ்சித்தின் நண்பர் என்பதாலே ஒதுக்குறாங்க.. கலையரசன் பளிச்!
சென்னை: நடிகர் கலையரசன் தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர்களில் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது கதாபாத்திரங்கள் பல படங்களில் ரசிக்கும்படியாக இருந்துள்ளது. அவரது ஆரம்பகால படங்களான மெட்ராஸ் மற்றும் மதயானைக் கூட்டம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், அவரது நடிப்புக்கான அங்கீகாரங்களையும் பெற்றுக் கொடுத்தது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் படங்களில் அடுத்தடுத்து கலையரசன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இயக்குநர் பா. ரஞ்சித்திற்கு நான் நெருக்கமானவன் என்பதாலே சினிமாத்துறையில் சில வாய்ப்புகள் எனக்கு மறுக்கப்பட்டுள்ளது என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கலையரசன், பிரியாலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டிரெண்டிங் படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் கலையரசன் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
அந்த பேட்டியில், " வாழை படத்திற்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்பது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு அது பழகிவிட்டது. இது மட்டும் இல்லாமல், வாழை படத்தில் நான் நடிக்கும்போது இந்த படத்தில் எனக்கு விருது கிடைக்கும் என்ற எண்ணத்தோடு, எதிர்பார்ப்போடு நான் நடிக்கவில்லை.

சினிமாவில் இருக்கும் சாதி: சினிமாவில் சாதி இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் சினிமாவில் சாதி மிகவும் மோசமாக உள்ளது. அரசியல் என்பார்கள், ஜாதி இல்லை என்று கூறுவார்கள், ஆனால் மிகவும் வலுவாக சினிமாவுக்குள்ளே சாதி உள்ளது. நான் பா. ரஞ்சித்துக்கு நெருக்கமானவர் என்பதாலே என்னுடன் பலரும் பணியாற்ற யோசிக்கிறார்கள். நான் அது குறித்து கவலைப்படுவதில்லை. எனது வேலையை திறம்பட செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சாதி வெறியோடு இருப்பவர்கள் இடத்தில்தான் பிரச்னை உள்ளதே தவிர, நம்மிடத்தில் எந்த பிரச்னையும் இல்லை.
அப்படிப்பட்டவர் இல்லை: பா. ரஞ்சித் படங்களில் குறிப்பிட்டவர்கள் தான் நடிக்க வேண்டும், நடிக்க முடியும் என்ற எந்த வரையறையும் இல்லை. அவர் படத்தில் அனைத்து தரப்பினரும் நடித்துள்ளார்கள். பா. ரஞ்சித்தும் அதுபோல யோசிக்க கூடியவர் இல்லை. ஆனால், இதெல்லாம் இல்லை இல்லை எனக் கூறிக்கொண்டு இருப்பவர்கள் தொடர்ந்து தங்களுக்கானவர்களோடு மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். எனக்கே சிலர் அறிவுரை போல கூறியுள்ளார்கள், ரஞ்சித்துடன் இருக்க வேண்டாம் என்று.
ரஞ்சித் யார்னு தெரியும்: அப்படி சொன்னவர்களை நோக்கி, போயா.. அதெல்லாம் என்னிடம் சொல்லக் கூடாது என்று கூறியுள்ளேன். நான் ரஞ்சித் படங்கள் மட்டும் இல்லாமல் மற்றவர்கள் படங்களிலும் நடிக்கிறேன். எல்லா இடங்களிலும் ஒரே உழைப்பைத் தான் போடுகிறேன். சினிமாவைக் கடந்தும் நான் பா. ரஞ்சித்தை நான் மதிக்கிறேன். அவர் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார் என்பதற்காக நான் அவரை மதிக்கவில்லை. அவரது குணமும் எண்ண ஓட்டமும் என்ன என்பது உண்மையில் எனக்குத் தெரியும். மற்றவர்கள் என்னை அழைக்கவில்லை என்பதற்காக ரஞ்சித் மீதான மரியாதையையும் அன்பையும் குறைத்துக் கொள்ள முடியாது அல்லவா" என்று பேசியுள்ளார். கலையரசனின் இந்த பேட்டி மற்றும் அவரது பா. ரஞ்சித் குறித்த அவரது எண்ணங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











